திங்கள், 13 செப்டம்பர், 2010

ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? இறுதிப் பகுதி

தலைவர் பிரபாகரன் போராட்டத்தை புலத்துத் தமிழ் மக்களிடம் தான் ஒப்படைத்துள்ளதாக எவரிடம் கூறினார்? எப்போது பிரகடனப்படுத்தினார்?
களத்துக்கு வெளியில் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் நடாத்தப்படலாம் என்று அவர் ஒரு போதும் நம்பியதில்லை. அவ்வாறு நம்பியிருப்பாராயின் இறுதிவரை நின்று களமாடாமல் முன்னரே அவர் வேறு நாடு ஒன்றில் தன்னை நிலைப்படுத்தி போராட்டத்தை வழிநடாத்த முனைந்திருப்பார்.
நமது போராட்டத்தின் இன்றைய நிலையை மிகச் சுருக்கமாக மதிப்பீடு செய்வதும் நாம் முன்னோக்கி நகர்வதற்கு செய்யக்கூடியவை குறித்து சில கருத்துக்களைப் பதிவு செய்வதும்தான் இப் பகுதியின் நோக்கம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டமையும் தமிழீழத் தாயகம் சிங்களத்தின் முழுமையான ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டமையும் எத்தகைய நிலைமைகளைத் தமிழர் தேசத்துக்கு ஏற்படுத்தியுள்ளது?
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? தமிழீழம் சாத்தியமானதுதானா?
இவையெல்லாம் இன்று ஈழத்தமிழர் தேசத்தின் அக்கறைக்கு மட்டுமல்ல உலகத் தமிழினத்தின் அக்கறைக்குமுரிய கேள்விகளாகி விட்டன.
இவை தொடர்பாக எத்தகைய கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றன? எத்தகைய நிலைப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன?
இக் கேள்விகளில் இருந்து இப் பகுதியினை ஆரம்பிப்போம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக இரு மாறுபட்ட கருத்து நிலைப்பாடுகள் தற்போது தமிழர் மத்தியில் இருந்து வெளிப்படுகின்றன.
ஒன்று, தமிழீழம் என்பது தோற்கடிக்கப்பட்டுவிட்ட இலட்சியம். இனி தமிழீழம் சாத்தியப்படப் போவதில்லை. எனவே தமிழீழக் கனவைக் கைவிட்டு, நாடு பிரியாத வகையில் அரசியல் தீர்வு தொடர்பாக கவனம் கொடுத்து அதை நோக்கிச் செயற்பட வேண்டும்.
மற்றையது, தமிழீழம் என்பது தோற்கடிக்கப்பட்டு விட்ட அரசியல் இலக்கு அல்ல. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரப் பாதையில் முன்னெடுத்துச் சென்று இலக்கை அடைவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் இருக்கின்றன.

அரசியல் அரங்கில் முதலாவது நிலைப்பாடு தமிழீழத் தாயகத்தில் பலமாக வெளிப்படுகிறது.
தமிழீழம் என்பது தோற்கடிக்கப்பட்டவிட்ட இலட்சியம் என்று மிக வெளிப்படையான கருத்துக்களைத் தீவிரமாக முன்வைக்காவிடினும் இந் நிலைப்பாட்டைத் தமக்குள் வரித்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப் போக்குக்கு தலைமை கொடுக்கிறது.


இரண்டாவது நிலைப்பாடு புலத்தில் பலமாக வெளிப்படுகிறது. இந் நிலைப்பாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், சில நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அவைகளும் இயங்கி வருகின்றன.
முதலாவது நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழத்துக்கான போரும் (War) முடிவடைந்து விட்டது. போராட்டமும் (Struggle) முடிவடைந்து விட்டது. தமிழீழம் என்பது ஒரு அரசியல் நிலைப்பாடாக, மக்கள் கோரிக்கையாக முன்வைக்கப்படல் இனி சாத்தியமாகப் போவதில்லை.

இரண்டாவது நிலைப்பாட்டின்படி தமிழீழத்துக்கான போர்தான் முடிவடைந்துள்ளதே தவிர போராட்டம் முடிவடையவில்லை.
இங்கு போர் என்பது தமிழீழ விடுதலையினை வென்றெடுப்பதற்காக ஆயுதம் தாங்கிய வகையில் சிறிலங்கா அரசை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகைளை குறித்து நிற்கிறது.
போராட்டம் என்பது தமிழீழ இலக்கினை தமிழீழ மக்களின் அரசியல் நிலைப்பாடாக, இலங்கைத் தீவில் தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்னிறுத்தி அதனை முன்னோக்கி நகர்த்துவதற்கான அனைத்து வகையான செயற்பாடுகளையும் குறித்து நிற்கிறது.
எனவே போர் இல்லாத போராட்டம் என்பதை ஆயுதம் தாங்காத போராட்ட நடவடிக்கைகளாக இங்கு அர்த்தப்படுத்திக் கொள்ளுதல் பொருத்தம்.
சிலர் போரை போராட்டம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தி, போர் இன்னும் முடியவில்லை என வாதிடுகின்றனர். ஆயுதம் தாங்கியோ அல்லது தாங்காமலோ நடைபெறும் போராட்டத்தை இவர்கள் போர் என்றே விழிக்கின்றனர்.
இவர்களைப் பொறுத்தவரை ஆயுதம் தாங்காமல் நடைபெறுவதும் போர்தான். ஆயுதம் தாங்கியது இரத்தம் சிந்தும் போர், தாங்காதது இரத்தம் சிந்தாப் போர்.
இவற்றைவிட போரும் முடிவடையவில்லை, போராட்டமும் முடிவடையவில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களையும் காணமுடிகிறது.
அதாவது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை, தொடரும் என்கிறது இந் நிலைப்பாடு.
இவர்களின் குரல் புலத்தில் சற்றுத் தாழ்ந்தும் தமிழகத்தில் சற்று உரத்தும் ஒலிக்கின்றன. தாயகத்தில் இருந்து இத்தகைய குரல்கள் வெளிப்படவில்லை.

இவ் விடயத்தில் இக் கட்டுரைத்தொடர் தனது நிலைப்பாட்டை முதலில் பதிவு செய்ய விரும்புகிறது.
மீண்டும் தமிழீழ விடுதலைக்கான ஒரு ஆயுதம் போராட்டம் என்பது புலத்திலோ அல்லது தமிழகத்திலோ தீர்மானிக்கப்படக்கூடிய ஒரு விடயம் அல்ல.

இது தமிழீழத் தாயகத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம்.
முன்னர் தாயகத்தில் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் புலத்திலும் தமிழகத்திலும் மற்றும் உலக நாடுகள் எங்கும் வாழும் தமிழர்கள் தம்மால் முடிந்த பங்களிப்புக்களை வழங்கினர்.
அது தாயகத்தில் இருந்து வந்த அழைப்புக்கு, தாயகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு உறுதுணையாக இயங்கிய ஒரு நிலை.
தற்போது இத்ததைய போராட்ட அழைப்புக்கள் எதுவும் தாயகத்தில் இருந்து வெளிவரவில்லை. அதற்குரிய சூழலும் அங்கு இல்லை.
ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது இரத்தமும் சதையும் இணைந்த ஒரு தீக்குளிப்பு.
இதனை புலத்து இணையத்தளங்களிலும் தமிழகத்து அரசியல் மேடைகளிலும் நிகழ்த்த முடியாது.
தாயகத்தில் உள்ளோரைத் தவிர்ந்த ஏனையோர் எவரும் ஆயுதப் போராட்டம் நடாத்த வேண்டும் என்று கூறுவதானால், முதலில் தனியானவர்கள் தனித்தும், குடும்பங்கள் உள்ளவர்கள் தங்கள் குடும்ப சகிதமும் ஈழத் தாயக மண்ணில் போய் வாழ வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தில் தாமும் தமது பிள்ளைகள் உள்ளடங்கலான முழுக் குடும்பத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக வேண்டும்.
அப்போது இவர்கள் எடுக்கும் முடிவு தாயகத்தில் வாழ்வோர்களால் எடுக்கப்படும் முடிவுகளாக இருக்கும். இம் முடிவினை எடுப்பதற்கான தார்மீக உரிமையும் இவர்களுக்கு இருக்கும்.
அதுவரை இவர்களின் பேச்சுக்களைப் புறந்தள்ளி ஒதுக்கி விடுவோம்.
இன்னொரு சாரார் சிறிலங்கா அரசுடன் இணைந்த வகையில் இயங்குவது குறித்த கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இங்கு சிறிலங்கா அரசினை எதிர்கொள்வது என்பது வேறு. சிறிலங்கா அரசுடன் இணைந்து இயங்குவது என்பது வேறு.
சிறிலங்கா அரசினை முழுமையாகப் புறந்தள்ளி செயற்படுதல் தாயகத்தில் உள்ளோரால் தற்போதய சூழலில் சாத்தியமாகாத ஒரு விடயம். இதனால் இவர்கள் சிறிலங்கா அரசினை எதிர்கொள்ள வேண்டித்தான் வரும்.
சிறிலங்கா அரசுடன் இணைந்து இயங்குதல் என்பது சிறிலங்கா அரசின் திட்டத்துக்காக இயங்குதல் எனப் பொருள்படும். இது தமிழர் தேசத்துக்கு எதிரானதாகத்தான் அமையும்.
இதனால் அரசியல்ரீதியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகளை இக் கட்டுரைத் தொடர் நிராகரிக்கிறது.
ஆதலால் நமது அக்கறைக்குரிய விடயங்களாக இருப்பவை, சிறிலங்கா அரசின் திட்டங்களுக்குட்படாத வகையில் ஈழத்தாயகத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் முயற்சிகளும், புலத்தில் மேற்கொள்ளப்படும் ஆயுதம் தாங்கும் நிலைப்பாட்டைக் கொண்டிராத வகையிலான தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னெடுப்புக்களுமே.
இவற்றை விட அரசியலைப் புறம் தள்ளிவிட்டு மேற்கொள்ள முனையப்படும் மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு முன்னெடுப்புக்களும் நமது அக்கறைக்குரிய விடயங்களே. இவற்றைப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.
தற்போதய தாயக நிலைமைகளில் இருந்து எமது அடுத்த கட்டம் குறித்து சிந்திப்போம்.
தாயகத்தில் ஈழத் தமிழர் தேசத்தின் நிலை தற்போது மிகவும் பலவீனமானதாகவே உள்ளது.
உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்குரிய தகைமைகளை (Capability) இழந்து விட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே தற்போது தாயக மக்கள் உள்ளனர்.
அறிஞர் அமாத்யா சென் (Amartya Sen) தமது மேம்பாடு (development) குறித்த கருத்துக்களில் தகைமை வளர் அணுகுமுறை (capability appraoch) பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மேம்பாடு அடைவதற்கு அதற்கரிய தகைமைகள் வளர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக குறிப்பிடும் அமாத்யா சென் அதற்கு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் குறிப்பிடுகிறார்.
சுதந்திரமற்ற தாயக மக்களால், தற்போதய தமது நிலையில் ஒரு பலமிக்க சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் தமிழர் தேசத்துக்கெதிரான திட்டங்களை எதிர்கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றதாகவே இருக்கும்.
சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்து விழுங்குவதனை மிகத் தெளிவான திட்டமாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
சிறிலங்கா அரசினைப் பொறுத்தவரை ஈழத் தமிழ் மக்கள் தம்மைத் தேசமாக (Nation) உரிமை கொள்ளக்கூடிய அனைத்துத் தகைமைகளையும் அழித்து விடுவதில் உறுதியாக உள்ளது.
இதற்கு வடக்கு கிழக்கு இணைந்ததான தமிழர் தாயகம் நிர்வாக ரீதியாகவோ அல்லது பௌதிக ரீதியாக இணைந்த புவியியல் பகுதியாகவோ இருக்கக்கூடாது என்பது சிங்களத்தின் நிலைப்பாடு.
கிழக்கை சிங்களமயமாக்கியது போல வடக்கையும் சிங்களமயமாக்கும் திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றன.
தமிழர் தாயகத்தை சிங்கள தேசமாகக் கரைத்துவிடும் கொள்கையின்பாற்பட்ட (Assimilation) தனித் தமிழ் அடையாளத்தை படிப்படியாக இல்லாது ஒழிக்கும் திட்டத்தில் உயிரியல் ஒன்றுகலப்பும் (amalgamation) ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத் திட்டப் பிரகாரம் சிங்களவர்களைத் தமிழர் பகுதியில் இயல்பாகக் கலக்கப் பண்ணி சிங்களவர்களும் தமிழர்களும் திருமணம் புரிந்து கலப்புத் தலைமுறையினை உருவாக்குவதன் ஊடாக தனித் தமிழ் அடையாளத்தை காலப் போக்கில் இல்லாது ஒழிப்பதற்கு சிங்களம் முழுவீச்சுடன் தயாராகி விட்டது.
மேற்குலகத்தில் வெளிநாட்டவர்களை தமது சமூகத்துடன் கரைந்து போகச் செய்வதற்கு மேற்குலக அரசுகள் எடுத்த முயற்சிகள் பெரியளவில் வெற்றியடையாமல் போனமைக்கு நிறமும் மதமும் முக்கியமான இரு காரணங்கள்.

வெள்ளை இனத்துடன் கறுப்பினம் கலக்கும் போது தோல் வித்தியாசம் மறைந்து விடுவதில்லை. வேறுபாடு தெரிந்து கொண்டுதான் இருக்கும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தாயாரும் ஒரு வெள்ளையினப் பெண்தான்.
இதனால் கரைந்து போதல் அங்கு இலகுவானதாக அமையவில்லை.
யூத மதம் (யூடிசம்), இஸ்லாம் மதம் ஆகியன தமது தனித்துவங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவை. அதனால் மதத்தின் ஊடாகத் தமது தனித்துவத்தைப் பேணவும் இம் மதம் சார்ந்தவர்களால் முடிந்தது.
ஆனால் தமிழர்கள் சிங்களவர்களுக்கிடையே நிறவேறுபாடுகள் இல்லை. மதரீதியாகவும் தமிழர்கள் ஒப்பீட்டளவில் இறுக்கம் குறைந்தவர்கள். பலர் திருமணத்துக்காக வேறு மதத்துக்கு இலகுவாக மாறியுமுள்ளார்கள்.
நீர்கொழும்பு போன்ற இடங்களில் தமிழர்கள் இரண்டு மூன்று தலைமுறைகளில் சிங்களவர்களாக மாறியமையினைப் பார்க்கும் போது சிங்களத்தின் திட்டத்தின் அர்த்தம் புரிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது.
தமது கூடுதல் மக்கள் தொகைப் பலத்தின் ஊடாக நாளடைவில் படிப்படியாய் தமிழரின் தனித்துவமான இனத்துவ அடையாளத்தை அழித்து விடலாம் என சிங்களம் நம்புகிறது.
மேலும் இத்திட்டம் இயல்பான மக்கள் இணைவாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை எதிர்ப்பது ஒருவகையான இனவாதமாகவும் சித்தரிக்கப்படக்கூடியது.
ஈழத் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்த சிங்களம் வகுத்துள்ள அடுத்த திட்டம் தமிழரின் பொருளாதார வாழ்வை காவு கொள்வது.
தமிழர் தாயகத்தின் பொருளாதார முயற்சிகள் யாவற்றையும் அரசினதும் சிங்கள தனியார் முதலாளிகளதும் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதன் மூலம் தமிழர்கள் தமக்கெனப் பொதுப் பொருளாதார வாழ்வை அமைத்துக்கொள்ள விடாமல் சுருக்குவது சிங்களத்தின் முனைப்புகளில் ஒன்று.
அடுத்த திட்டம்  தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்துவது.
சிங்கள மக்களை வடக்கு கிழக்கு நோக்கி கூடுதலாக நகர்த்துவதன் ஊடாகவும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து அகற்றுவதன் ஊடாகவும் தமிழர் பிரதேசத்தில் இருந்து தெரிவுசெய்யப்படக்கூடிய மொத்தப் பிரதிநிதிகளின் தொகையினை குறைத்துக் கொள்வதுடன், இப் பகுதிகளில் இருந்து கூடுதலான சிங்களப் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படும் சூழலை உருவாக்குவது இன்னொரு முயற்சி.
அடுத்த திட்டம் தமிழர் பிரதேசத்தின் புவியியில் வடிவமைப்பை (Landscape) சிங்களதேசத்தின் வடிவமைப்புப்போல் மாற்றியமைப்பது.
புதிதாய் கட்டப்படும் கட்டிட வடிவமைப்பினை சிங்கள பாரம்பரியத்துக்கேற்ற முறையில் அமைத்தல், பௌத்த விகாரைகளை தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் பரவலாக அமைத்தல் போன்றவை உட்பட்ட நடவடிக்கைகள் இத் திட்டத்தின் பாற்பட்டவை.
இவை மட்டுமன்றி தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்வதற்கு மேலும் பலமுனைகளில் சிங்களத்தின் திட்டங்கள் தயாராகியுள்ளன. இடவிரிவுக்கஞ்சி அவற்றை இங்கு தவிர்த்துச் செல்கிறோம்.
மிகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இனக் கபளீகரத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தாவிடின் தமிழீழத் தாயகம் ஈழத் தமிழர்கள் கைகளை விட்டுப் பறி போய்விடும்.
தமிழர்களும் ஒரு தேசத்துக்கான தகைமையினை இழந்து விடுவார்கள். இதன் பிறகு தமிழீழம் என்ற சித்திரத்தை வரைய தமிழர் தாயகப்பிரதேசம் என்ற சுவர் எம்மிடம் இருக்காது.
இதனால் எமது அடுத்த கட்டப் போராட்டம் என்பது முதலில் தமிழர் தாயகத்தினை கபளீகரம் செய்ய முனையும் சிறிலங்கா அரசின் முயற்சியினைத் தடுத்து நிறுத்துவது என்பதில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும்.
தாயக மக்கள், புலத்துத் தமிழ் மக்கள், தமிழகம் உட்பட்ட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்த வகையில் எதிர்கொள்ள வேண்டிய அதிமுக்கிய பிரச்சினையாக இது உள்ளது.
ஆனால் கவலைதரும் விடயம் என்னவெனில் தாயகத்திலோ, புலத்திலோ அல்லது தமிழகத்திலோ தமிழர் தாயகத்தையும், ஈழத் தமிழர் தேசத்தையும் கபளீகரம் செய்ய முனையும் சிங்களத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நன்கு வடிவமைக்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டப் பொறிமுறை எதுவும் இதுவரை வெளிப்படவில்லை என்பதுதான்.
நாம் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களத்தின் கபளீகர நோக்கத்தை, செயற்பாட்டை நாம் போராட்டத்தின் மூலம்தான் எதிர்கொள்ள முடியுமே தவிர சிங்களத்திடம் மன்றாடுவதன் மூலம் அல்ல.

ஆனால் அதேவேளை தமிழர்களாகிய எம்மால் மட்டும் இதனை செய்து முடிக்க முடியும் என எண்ணுவோமானால் நாம் மீண்டும் ஒரு பரிதாபமான தோல்வியினைத் தழுவ வேண்டித்தான் வரும்.
சிங்களத்தை எதிர் கொள்ளும்போது நாம் கூட்டுச் சேர்தல் தவிர்க்க முடியாதது. யாருடன் நாம் கூட்டுச் சேர்வது? எவர் எம்மை எமது நன்மைக்காக மட்டும் தமது கூட்டில் இணைக்கப் போகிறார்கள்? எம்மை கூட்டில் இணைத்துக் கொள்வதற்கு எம்மிடம் உள்ள பலம் யாது?

இங்கும் நாம் தவறிழைக்காமல் இருப்பது முக்கியம்.
தற்போது 5 ஆம் கட்ட ஈழப்போர் புலத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தலைவர் பிரபாகரன் போராட்டத்தை புலத்துத் தமிழ் மக்களிடம் ஒப்படைத்துள்ளார் எனவும் பெரும் ஆரவாரம் புலத்தில் எழும்புகிறது.
தலைவர் பிரபாகரன் போராட்டத்தை புலத்துத் தமிழ் மக்களிடம் தான் ஒப்படைத்துள்ளதாக எவரிடம் கூறினார்? எப்போது பிரகடனப்படுத்தினார்?
களத்துக்கு வெளியில் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் நடாத்தப்படலாம் என்று அவர் ஒரு போதும் நம்பியதில்லை. அவ்வாறு நம்பியிருப்பாராயின் இறுதிவரை நின்று களமாடாமல் முன்னரே அவர் வேறு நாடு ஒன்றில் தன்னை நிலைப்படுத்தி போராட்டத்தை வழிநடாத்த முனைந்திருப்பார்.

2008 ஆம் மாவீரர் நாள் உரையினை நிறைவு செய்யும் தருவாயில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘இந்த வரலாற்று சூழமைவில் தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேசவிடுதலைக்கு உறுதியாகக் குரல் எழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன் தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில் தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’

களத்தில் விடுதலைப்புலிகள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தை பலப்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பே இது. இதனை விட தலைவர் பிரபாகரன் புலத்துத் தமிழ் மக்களிடம் போராட்டத்தை கையளிப்பதாக சிறப்புச் செய்தி எதனையும் விடவில்லை.
தலைவர் பிரபாகரன் 2008 ஆண்டு மாவீரர்நாளில் விடுத்த செய்தியினையே தலைவர் புலத்துத் தமிழ்மக்களிடம் விடுதலைப் போராட்டத்தை ஒப்படைத்ததாகப் பலர் அர்த்தப்படுத்துகின்றனர்.
நாம் இதனைக் குறிப்பிடும் நோக்கம் புலத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னெடுப்புக்களை நிராகரிப்பதல்ல.
களத்தில் தமிழீழ இலக்குப் பற்றி எதுவுமே பேசப்படவோ அல்லது அதற்காக செயற்படவோ முடியாத ஒரு சூழலில் புலத்தில் இது மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள தேவையினைக் இக் கட்டுரை புரிந்து கொள்கிறது.
தமிழீழம் சாத்தியமாவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற இக் கட்டுரையாளரின் நிலைப்பாட்டில் இருந்துதான் புலத்துச் செயற்பாடுகளையும் இக் கட்டுரை மதிப்பீடு செய்கிறது.
ஆனால் புலம் தனது பலம் தொடர்பாக மிகை மதிப்பீடு செய்யக்கூடாது.
உண்மையில் தமிழ் டயாஸ்பொறா (Diaspora) மிகவும் இளையது. மேலைத்தேய கொள்கை வகுப்பாளர்களிடம் செல்வாக்குச் செலுத்தும் பலம் அதற்கு இல்லை.
தமிழ் டயாஸ்பொறாவினை யூத டயாஸ்பொறாவுடன் ஒப்பிட முடியாது.
களத்தில் நடைபெற்ற வீரம் செறிந்த போராட்டத்தால் தமிழ் டயாஸ்பொறா இப் போராட்டத்தைத் தாங்கி நிற்கிறது என்ற அளவில் பலம் மிக்க டயாஸ்பொறாவாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.
போராட்ட காலத்தில் தாயகமக்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு புலத்துத் தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் தம்மால் இயன்ற பங்களிப்பினை ஆற்றியுள்ளனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு தமிழ் டயாஸ்பொறா வழங்கக்கூடிய பங்களிப்பு யதார்த்தமாகத்தான் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு என்னதான் செய்யப்படவேண்டும்?
தாயகத் தமிழ் மக்கள், புலத்துத் தமிழ் மக்கள், தமிழக மக்கள் உள்ளடங்கலான உலகத் தமிழ்மக்கள் முதலில் ஒரு பொதுத்தளத்தில் ஒன்றிணைய வேண்டும்.
அப் பொதுத் தளம் தமிழீழமாக இருப்பின் தாயகத் தமிழ் மக்கள் விடுபட்டுப் போய்விடுவர். தாயகத் தமிழ் மக்களை வெளியே விட்டு விட்டு ஈழத்தாயகத்தில் தமிழீழம் அமைப்பது பற்றிப் வெளியேயிருந்து பேசிக் கொண்டிருந்தால் நாளடைவில் அது அர்த்தமற்றதாகிப் போய்விடும்.
எனவே தமிழர் அனைவரும் ஒன்றிணையக்கூடிய பொதுத்தளமாக‘ஈழத் தமிழர் தேசத்தையும் தமிழர் தாயகத்தையும் சிங்களம் கபளீகரம் செய்யாது பாதுகாத்தல்’ என்பது அமைதலே பொருத்தமாக இருக்கும்.
இதேவேளை தமிழீழத் தனியரசு என்ற நிலைப்பாட்டை உயிர்ப்பாக வைத்திருக்கும் வேலைத் திட்டங்களை புலத்திலும் தமிழகத்திலும் உலகத்தமிழர் வாழும் ஏனைய நாடுகளிலும் சமாந்தரமாக இப்பொதுத்தளத்துடன் கலக்காத வகையில் மேற்கொள்ளலாம்.
அடுத்து இவ் இலக்குக்கு உதவக்கூடிய சக்திகளை நாம் அணிசேர்த்தாக வேண்டும்.
இதற்கு ஈழத் தமிழர் தேசத்தையும் தமிழர் தாயகத்தையும் சிங்களம் கபளீகரம் செய்வதனைத் தமக்கும் பாதிப்பாக பார்க்கக்கூடிய உலக சக்திகள் எவை என்பது குறித்து நாம் கவனம் கொடுக்க வேண்டும்.
இங்கு எமது வெளிநாட்டுக்கொள்கை குறித்த சிந்தனை முக்கியம் பெறுகிறது.
‘ஈழத் தமிழர் தேசத்தையும் தமிழர் தாயகத்தையும் சிங்களம் கபளீகரம் செய்யாது பாதுகாத்தல்’ எனும் எமது நலன்களுடன் எந்த சக்திகளின் நலன்கள் பொருந்தும் என நாம் நோக்க வேண்டும்.
இலங்கைத்தீவினைப் பொறுத்தவரை இந்தியா, சீனா, அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் ஆகிய மூன்றும்தான் கூடுதல் முக்கியம் பெறும் சக்திகள்.
இதில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் போராட்டமும் அழிக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் மக்களின் கோபம் இம் மூன்று சக்திகளின் மீதும் உள்ளது. இந்தியாவின் மீது கூடுதலாகவும் உள்ளது.

நாம் கோபித்துக் கொண்டு இருப்பதனால் மட்டும் எமக்குச் சாதகமாக எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை.
இம் மூன்று சக்திகளில் சீனா உறுதியாக சிங்கள அரசுடன் மட்டும்தான் நிற்கும். அரசுகளுடன் இணைந்து நின்று தனது நலன்களை அடைந்து கொள்வதே சீனாவின் அணுகுமுறை. உலகின் பல ஒடுக்குமுறை அரசுகளுக்கு சீனா உற்ற நண்பன்.

மேலும் தமிழர்களால் சீனாவினை எவ்வகையிலும் தமது செல்வாக்குக்குட்படுத்த முடியாது. இதனை  டயன் ஜெயதிலகாவும் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழர் தாயகத்தை சிங்களம் கபளீகரம் செய்வதற்கு சீனா உறுதுணையாகத்தான் நிற்குமே தவிர அதனைத் தனக்கு பாதகமானதாக சீனா கருதப்போதில்லை.
எனவே தமிழர்கள் சீனாவுடன் கூட்டுச்சேர முடியாது. இதற்கான வாய்ப்புக்களும் இல்லை.
அமெரிக்கா சிறிலங்கா அரசினைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப் பார்க்கிறது. சிறிலங்கா அரசிலும் சில மாற்றங்களைச் (State reforms) செய்யப் பார்க்கிறது.
இதனால் தற்போதய ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு சில அழுத்தங்கள் கொடுக்க மேற்குலகம் விரும்பும். இதே சமயம் இவ் அழுத்தங்கள் சிறிலங்கா அரசினை சீனாவை நோக்கிக் கூடுதலாக தள்ளி விடாமலும் கவனித்துக் கொள்ள முனையும்.
சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்க மேற்குலகம் விரும்புவதால் சிங்களத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கான வெளியொன்று மேற்குலகத்தில் தமிழருக்குக் கிடைக்கும். தமிழர்கள் அதனைப் பயன்படுத்தத் தவறக்கூடாது.
இருப்பினும் இவ்வெளி வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும். சிறிலங்கா அரசு மேற்குலகத்துக்கு கட்டுப்படும் பட்சத்தில் இவ்வெளி மிகவும் சுருங்கிவிடும்.
இதேவேளை மேலைத்தேய நாடுகளில் இருக்கும் தாராளவாத ஜனநாயகம் எமக்குச் சில வாய்ப்புக்களை வழங்கும். இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி ஒரு பலம் வாய்ந்த அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்பவுது ஈழத் தமிழர் தாயகத்துக்கு பலம் சேர்க்கும்.
இதனைவிட போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கும் புலம்பெயர்ந்த மக்கள் தமது பங்கினை மேற்குலக அரச, அரசசார்பற்ற அமைப்புகளின் துணையுடன் வழங்குதல் அவசியம்.
மேலும், மேற்குலகில் புலம்பெயர்ந்த மக்கள் தாயக மக்களுக்கு காவல் நாயாக உள்ளார்கள் எனவும் அனைத்துலகரீதியாக சிறிலங்கா அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்த முனைவார்கள் என்ற எண்ணம் சிங்களத்துக்கு இருக்கும்போது அதன் செயற்பாட்டு வேகம் சிறிது குறையக்கூடும்.
இதேவேளை, தற்போதய போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய பேச்சுக்கள் எல்லாம் சிறிலங்கா அரசைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கான மேற்குலகத்தின் அழுத்தங்களின் பாற்பட்டவையும்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஒரு பேச்சுக்கு ராஜபக்ஸக்கள் மீது போர்க்குற்ற விசாரணைகள் கொண்டு வரப்படுகின்றது என்று வைத்துக் கொண்டால்கூட அது சிறிலங்கா அரசாங்கத்தினைப் (Government) பாதிக்கும் விடயமாக இருக்குமே தவிர சிறிலங்கா அரசினை (State) பாதிக்கும் விடயமாக இருக்கப் போவதில்லை.
தமிழர் தாயகத்தை சிங்களம் கபளீகரம் செய்யும் திட்டத்தை மேற்குலகம் தனது பல்லினச் சமூகம் (multi-ethnic society) என்ற கண்ணாடியின் ஊடாகப் பார்க்கும்போது அதில் பெரிய தவறினைக் காணப் போவதில்லை.
இதனால் சிங்களத்தின் இனக்கபளீகரத்தை இனஅழிப்பின் அங்கமாகவே (Genocide) நாம் சித்தரிக்க வேண்டும்.
இவ் அணுகுமுறைக்கு உடனடியாக மேற்குலக அரசமட்ட ஆதரவு கிடைக்கப் போவதில்லை. சிங்களம் மேற்கொள்ளும் இனக்கபளீகரத்தை இனவழிப்பாக அரசியல்ரீதியாக வியாக்கியானப்படுத்தி ஆதரவு திரட்ட மேற்குலக மக்கள் சமூகம் (Civil Society) ஓரளவு உதவக்கூடும்.
அடுத்தது இந்தியா.
தற்போது இந்திய அரசு சிறிலங்காவுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தனது நலன்கனை இலங்கைத்தீவில் அடைந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருகிறது.

இவ்விடயத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டியொன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இப் போட்டியில் இரு தரப்பையும் சமாளித்துக் கொண்டு தனது நலன்களை அடைந்து கொள்ள சிறிலங்கா முனைகிறது. இச் சமாளிப்பு தொடர்ச்சியாகச் சாத்தியமாகும் விடயம்தானா?

சீனா அல்லது இந்தியா இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை நாளடைவில் சிறிலங்காவுக்கு ஏற்படுமா? அவ்வாறு ஏற்படின் சிறிலங்கா யாரைத் தெரிவு செய்யும்? இந்தியாவினையா? அல்லது சீனாவினையா?
இக் கேள்விகளுக்கான விடைகளுக்கும் தமிழீழத்துக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கும் தொடர்புகள் உண்டு.
நாம் முன்னர் ஒரு பகுதியில் தமிழீழத்துக்கான கதவுகள் ஒன்றில் சிறிலங்காவுக்குள்ளால் அல்லது இந்தியாவுக்குள்ளால்தான் திறக்கப்பட்டாக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம்.
மேற்குறிப்பிட்ட கேள்விகளில், தெரிவு அவசியமாகி சிறிலங்கா அரசு இந்தியாவினை ஒதுக்கி விட்டு சீனாவைத் தெரிவு செய்கிறது என்று வைத்துக் கொண்டால் இந்தியா என்ன செய்ய முனையும்?
போனால் போகட்டும் போடா என்று முழு இலங்கைத்தீவினையும் விட்டு விட முனையுமா?
அல்லது தான் வருவதை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தமிழ் மக்களின் தாயகப் பிரதேசத்தை தம்வசப்படுத்தி ஒரு பகுதியினையாவது தமது செல்வாக்குக்கு உட்படுத்த முனையுமா?
இவ்வாறு ஒரு நிலை ஏற்படின் தமிழர் தாயகம் என்று ஒன்று எஞ்சியிருந்தால்தான் இந்தியாவுக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்கும்.
இதனால் இருக்கக்கூடிய ஒரு சில தெரிவுகளில் ‘ஈழத் தமிழர் தேசத்தையும் தமிழர் தாயகத்தையும் சிங்களம் கபளீகரம் செய்யாது பாதுகாத்தல்’ என்பது இந்திய நலன்களுடனும் ஒத்து வரக்கூடியது.

ஆனால் இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இந்தியாவை மீறி எதுவும் செய்ய முடியாது என்று தாயகத் தமிழர் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுடன், முக்கியமாக இந்திய அரசுடன் தொடர்புகளைப் பேணிய வண்ணம் அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கி வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும்; இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தி வருவதாகவும் தெரியவில்லை.
அரசுகளில் ஒரு வகையான பழமை பேணும் குணம் உண்டு. அது இந்திய அரசிடம் கூடுதலாகவே உள்ளது. தாம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட சில நிலைப்பாடுகளை இலகுவில் இந்திய அரசு மாற்றிக் கொள்வதில்லை.
தமிழீழம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடும் இத்தகையதுதான். இலங்கைத்தீவு பிரியாதவகையில் தனது நலன்களை அடைதல் என்பது அதன் அடித்தளம்.
இதனால் இந்தியாவின் தமிழீழம் தொடர்பான கொள்கைளில் மாற்றங்களை ஏற்படுத்துவது இலகு அல்ல. அனால் அதனைச் செய்யாமல் தமிழீழம் உருவாகுவதும் சாத்தியம் அல்ல.

மேலும் இந்திய அரசிடம் தமிழர் எதிர்ப்பு உணர்வு உண்டு என்ற வலுவான கருத்து ஒன்றும் உண்டு.
தற்போதய சூழலில் இந்திய அரசிடம் கெஞ்சி அதற்கூடாக எமது உரிமைகளைப் பெற்று விட முடியும் என நாம் எதிர்பார்க்க முடியாது. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழம் தொடர்பான இந்தியாவின் கொள்கைளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வியூகம் அமைத்துச் செயற்படவேண்டும். இவ் வியூகத்தில் ஈழத்தாயகம், புலத்துத் தமிழ் மக்கள், தமிழகத் தமிழ் மக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இந்தியாவில் அரச அதிகாரிகள் மட்டத்திலும் மக்கள் மட்டத்திலும் இருக்கக்கூடிய சீன எதிர்ப்புணர்வும் அச்ச உணர்வும் இதற்கு வாய்ப்புக்களைத் தரும்.
‘ஈழத் தமிழினம் சிங்களத்திடம் தோற்றால் இலங்கைத்தீவில் இந்தியா சீனத்திடம் தோற்கும்’ இதுவே இந்திய மக்களுக்கு குறிப்பாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு தரப்பினரிடமும் நாம் வலுவாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய செய்தியாகும்.
இந்திய அரசிடம் மண்டியிடாமல் தமிழக மற்றும் இந்திய மக்களை ஈழத் தமிழர் தேசம் தமது போராட்டத்தில் பங்காளிகளாக்கும் போது இந்தியக் கொள்கைகளில் மாற்றம் வருவதற்கான சூழல் உருவாகும்.

‘ஈழத் தமிழர் தேசத்தையும் தமிழர் தாயகத்தையும் சிங்களம் கபளீகரம் செய்யாது பாதுகாத்தல்’ என்பது இந்திய நலன்களைப் பாதுகாத்தல் என்பதனையும் உள்ளடக்கியுள்ளது என்பதனை தமிழ்நாட்டு மக்களும் இந்திய மக்களும் உரக்கப் பேசுவார்களானால் நமது தாயகம் பாதுகாக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.
இதற்கேற்ற வகையில்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் முன்நகர்த்தப்பட வேண்டும்.

இது இலகுவான பணியல்ல. ஆனால் சாத்தியமாக முடியாத இலக்கும் அல்ல.
நமது தாயகம் பாதுகாக்கப்பட்டால்தான் தமிழீழத் தனியரசுக்கான அத்திவாரம் இருக்கும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்!
(நிறைவடைகிறது)
ஈழம் தோல்வி கண்டதா அல்லது தோற்கடிக்கப்பட்டதா? காரணம் தேடும் கட்டுரைத் தொடர் என்ற தலைப்பில் 15.01.2010 தைத்திருநாள் முதற்கொண்டு எழுதப்பட்டு வந்த இத் தொடரை இப் பகுதியுடன் நிறைவு செய்து கொள்கிறேன்.

கடந்த பகுதியில் குறிப்பிட்டவாறு இது நமது போராட்டம் தொடர்பான ஒரு முழுமையான ஆய்வு அல்ல. நமது போராட்டப்பாதையை நாமே திரும்பிப் பார்த்த ஒரு சிறு முயற்சிதான் இது.
இத் தொடர் பற்றி வாசகர்கள் தமது கருத்துக்களை எழுதுவது நமது சிந்தனைகளை நாம் மேலும் வளர்த்துக் கொள்ள உதவும்.
வாசகர்களின் கருத்துக்களை உள்வாங்கி முன்வைக்கப்பட்ட கருத்துக்களை செழுமைப்படுத்தவும், தேவையேற்படும்போது விவாதங்களில் ஈடுபடவும் பொங்குதமிழ் தொடர்ந்தும் களம் அமைத்துத் தரும் என நம்புகிறேன்.

கடந்த எட்டு மாதங்களாக இத் தொடரை எழுதுவதற்கு வாய்ப்பளித்த பொங்கு தமிழுக்கும், கட்டுரைத்தொடருடன் இணைந்திருந்த வாசகர்களுக்கும் நன்றி!
அன்புடன்
தாமரை காருண்யன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக