வியாழன், 10 மார்ச், 2011


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தை சிறிலங்கா சமாளித்தது எப்படி? விபரிக்கிறார் மகிந்த சமரசிங்க
[ புதன்கிழமை, 09 மார்ச் 2011, 02:24 GMT ] [ கார்வண்ணன் ]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோருபவர்கள், குறைந்தது சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் மற்றும் தோட்டத்துறை அமைச்சரான மகிந்த சமரசிங்க.

“நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதிலுள்ள குறைகளை எவரும் சுட்டிக்காட்டலாம்.“ எனறும் அவர் தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிய பின்னர் அமைச்சர் மகிந்த சமரசிங்க நடத்திய முதலாவது செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் சட்டமா அதிபர் ,முன்னாள் வெளிவிவகாரச் செயலர்கள், வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர் என்று முன்னர் அரச அதிகாரிகளாக இருந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளதால் பக்கச்சார்புடன் ஆணைக்குழு செயற்படும் என்று குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

“ சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவை விமர்சனம் செய்யும் அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளான அனைத்துலக மன்னிப்புச்சபை, முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழுமம், மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் என்பனவற்றை சாட்சியம் அளிக்க வருமாறு நல்லிணக்க ஆணைக்குழு அழைப்பு அனுப்பியது.

ஆனால் அவர்கள் சாட்சியம் அளிக்க மறுத்து விட்டனர்.

ஜெனிவா ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் போருக்குப் பிந்திய நல்லிணக்கம், புனர்வாழ்வு நிலைமைகள் குறித்து எடுத்துக் கூறியிருந்தேன்.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியாகும் முன்னர் சிறிலங்காவை விமர்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன்.

ஐ.நாவில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளை மதிக்கின்றன.

ஜெனிவா பயணத்தின் போதும் ஐம்பதிற்கும் அதிகமான நாடுகளின் மூத்த பிரதிநிதிகளை சந்தித்துப் போருக்குப் பிந்திய மீள்எழுகை நடவடிக்கைகள், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு குறித்து விளக்கமளித்தேன்.

பெரும்பாலான நாடுகள் போர் வலயத்தில் நாம் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்துள்ளதாக ஏற்றுக் கொண்டன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்தும் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு குறித்தும் அவர்கள் திருப்தியடைந்தனர்.

சிறிலங்கா மீது மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் சிறியதொரு நாடுகளின் குழுவை அனைத்துலக சமூகத்தின் கருத்தாக நாம் அங்கீகரித்தால் அது பாரிய தவறாக அமைந்து விடும்.

சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக காணொலிக் காட்சி சோடிக்கப்பட்ட ஒன்று என்பதை அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஐ.நா நிபுணர்கள் குழுவுடன் சிறிலங்கா அரசாங்கம் எந்தத் தொடர்பையும் வைத்திருக்கவில்லை.

ஐ.நா பொதுச்செயலருடன் மட்டுமே நாம் தொடர்பில் இருக்கிறோம்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நியுயோர்க்கில் சட்டமா அதிபர், வெளிவிவகாரச் செயலர் உள்ளிட்ட சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மற்றும் நிபுணர்கள் குழுவை இரகசியமாகச் சந்தித்ததாக அண்மையில் வெளியான செய்திகள் குறித்து கேட்கப்பட்ட போது, அதுபற்றி கருத்து வெளியிட அமைச்சர் மகிந்த சமரசிங்க மறுத்து விட்டார்.

தான் அந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை என்பதால் கருத்து கூறமுடியாது என்றும் அதுபற்றி சட்டமா அதிபரிடம் கேட்குமாறும் அவர் கூறினார்.