திங்கள், 6 செப்டம்பர், 2010

நன்றி மறு ஆய்வு

காலத்தின் கோலமும் சிங்கள ராஜதந்திரத்தின் த்தின் கோலமும் சிங்கள ராஜதந்திரத்தின் வேடமும்

தனபாலா
தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியின் வெளிப்பாடுதான் ஆயுதப் போராட்டம் என்று பொருள்படக் கூடிய வகையில் உண்மையைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் மங்கள முனசிங்க குறிப்பிட்டுள்ளார். இது இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஒரு புதிய விடயமல்ல.
காலத்துக்கு காலம் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான நியாயங்களை சிங்களத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு வாக்குறுதி அளிப்பதும், பின்பு அவற்றை மீறுவதும் சிங்களத் தலைவர்களின் இயல்பான செயலாகும்.
சமஸ்டித் தீர்வுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அத்தியாவசியத் தீர்வு என இலங்கையின் வரலாற்றிலேயே முதல்முறையாக 1926ம் ஆண்டு S.W.R.D.பண்டாரநாயக்க குறிப்பிட்டார். தமிழ் தலைவர்கள் யாரும் இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்காத காலத்தில் பண்டாரநாயக்காவே முதல்முறையாக இதை முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சமஸ்டித் தீர்வை முன்வைக்கையில் அவர் கூறிய இன்னொரு வாக்கியம் மிகவும் கவனத்துக்குரியது. இதற்கெதிராக ஆயிரத்தொரு எதிர்ப்புக்கள் எழுந்தால் என்ன, இறுதியில் இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர தீர்விருக்காது என அவர் சிங்கள மக்களை நோக்கிக் கூறினார்.
ஆனால் இதே பண்டாராநாயக்காதான் 1958ம் ஆண்டு தமிழர்களின் இரத்தத்தை சிங்களவர் ருசி பார்க்க அனுமதித்தவர். தமிழின மனிதப் படுகொலை குற்றச்சாட்டுக்கான பட்டியலின் காலவரிசையில் முதலிடம் பிடிக்கும் சிங்கள ஆட்சியாளர் இவராவார். இவ்வாறு பதவிக்கு வரமுன்பு நீதி பேசி பதவிக்கு வந்தபின்பு, அதை மீறிப் படுகொலை செய்த ஆட்சியாளர் இவர்.
தனது பதவிக்காலம் முழுவதும் 3/4 பங்கு பெரும்பான்மைப் பலத்துடனும் நிறைவேவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது பதவிக்காலம் முடிந்த பின்பு 01-01-96 ’சண்டே ரைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த விசேட பேட்டியில் சமஸ்டித் தீர்வுதான் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேவழி எனக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னவர் பதவிக்கு வரமுன்பு சமஸ்டித் தீர்வு பற்றிச் சிலாகித்துப் பேசிவிட்டு, பதவிக்கு வந்தபின்பு 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றினார். அத்துடன் அதே ஆண்டு கல்லோயாவில் 156 தமிழர்களை சிங்களக் காடையர் மூலம் படுகொலை செய்வித்தார். 1958ம் ஆண்டு இனப்படுகொலை ஒன்றை அரங்கேற்றினார்.
ஆனால் பின்னவரோ பதவியில் இருக்கும் வரை 1977, 1979, 1983 கறுப்பு யூலை இனப்படுகொலை எனப் பல படுகொலைகளையும் நிறைவேற்றியதுடன் தனது ஆட்சிக்காலம் முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு தனது பதவிக்காலம் முடிந்தபின்பு தமிழர்களுக்கு சமஸ்டித் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஓர் இனப்படுகொலையாளன் பதவிக்கு வரமுன்பு சமஸ்டித் தீர்வு பற்றிக் கூறி பதவிக்கு வந்தபின்பு அதற்கு எதிராக நடந்தார். ஆனால் இன்னொரு இனப்படுகொலையாளனோ பதவியில் இருக்கும் வரை இனப்படுகொலை செய்துவிட்டு பதவியிலிருந்து இறங்கிய பின்பு சமஸ்டித் தீர்வு அவசியம் என்றார்.
இந்த இரு சிங்கள இனவாதத் தலைவர்களினதும் இரு அந்தலைகளுக்குரிய வாக்குமூலங்களைப் புரிந்து கொண்டால் மங்கள முனசிங்க கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தைப் புரிந்து கொள்வதில் கஸ்டமிருக்காது.
இவர் அரசாங்கத்தில் பங்குதாரராய் பதவி வகித்தவர். இப்போது நற்போதனையாளராய் மாறியிருக்கிறார். அவர்கள் ஞானம் பெற்றுவிட்டார்களோ இல்லையோ எமக்குத் தெரியாது. ஆனால் தாம் செய்த பாவங்களுக்காக ‘SORRY’ சொல்வதன் மூலம் இறந்த தமிழர்களை உயிர்ப்பித்துவிட முடியாது.
புத்தபிரான் போதிமரத்தின் கீழ் ஞானம் பெற்றார் என்பது உண்மை. ஆனால் சரத் பொன்சேகா தான் கட்டியாண்ட இராணுவச் சிறைக்குள் ஞானம் பெறுகிறாரோ நாம் அறியோம். தொப்பியில் இருந்து சப்பாத்து வரை அவருக்கு எல்லாமே கழற்றியாயிற்று என்பது மட்டும் இராணுவ நீதிமன்றத் தீர்ப்பால் எமக்குத் தெரிகிறது.
மங்கள முனசிங்கவினது ஒப்புதல் வாக்குமூலமும் சரத் பொன்சேகாவின் பட்டம், பட்டி, பதவிநிலை அந்தஸ்த்துக்கள், பதவிக்காலப் பரிசுப் பொருட்கள் என எவற்றை எல்லாம் தோலுரித்து அகற்ற முடியுமோ அவற்றையெல்லாம் அகற்றும் பணியில் ராஜபக்சாக்கள் முன்னேறுகிறார்கள்.
2005ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததும் புதிய இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகாவை நியமனம் செய்ய விரும்பினார் கோத்தபாய. அப்போது மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் அதனை விரும்பவில்லை என்று ஒரு செய்தி கசிந்தது. அவ்வாறு விரும்பாத மகிந்த ராஜபக்ச, கோத்தபாயவிடம் ‘இவர் ஓர் ஆபத்தான பேர்வழி. இவரால் பின்பு எமக்கு ஆபத்து நேரக்கூடும்’ என்று கூறி அவரை நியமிக்கத் தயங்கினாராம். அப்போது கோத்தபாய பின்வருமாறு கூறினாராம் ‘அதை என்னிடம் விட்டுவிடுங்கள் அவரை நான் பார்த்துக் கொள்வேன்’ இதன் பின்பு இராணுவச் சேவையிலிருந்த தனது சகோதரனான கோத்தபாயவை நம்பி சரத்தை அவர் இராணுவத் தளபதியாக நியமித்தார்.
தம் கை நிறைய தமிழரின் இரத்தத்தை வைத்திருந்த அனைத்துச் சிங்களத் தலைவர்களும் அக் கைகளாலேயே மலர்களை ஏந்தியவாறு, நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வெறும் மேலுடன் நின்று ஜனாதிபதித் தேர்தலுக்காக வரம் வேண்டிநின்ற காட்சிகளை மனதில் நிறுத்தினால் சிங்களத் தலைவர்களைப் புரிந்து கொள்வதில் எவ்வித கடினமும் இருக்காது.
முனசிங்காக்களும், பொன்சேகாக்களும் எத்தகைய ஞானம் பெற்றாலும் அவற்றைத் தமிழர்கள் நம்பவும் முடியாது. அவற்றால் தமிழனுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதுமில்லை. மாறாக யாராவது சொல்ல முடியும், சிங்களத் தலைவர்களிடம் நீதி சொல்லும் நிலை தலையெடுப்பதாக. இது மீண்டும் சிங்களவர்களிடம் நீதியை எதிர்பார்க்கும் இலவு காத்த கிளியின் கதையாகிவிடும்.
மீண்டும் மீண்டும் கசப்பான வரலாற்றைச் சிங்களத் தலைவர்கள் எமக்குத் தந்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த சிங்களத் தலைவர்களின் கருத்துக்களை விளங்கிக் கொள்வோமானால் மங்கள முனசிங்காவின் கருத்தை நாம் மறுபக்கமாகவே பார்க்க வேண்டும்.
அதாவது ராஜபக்சவின் ஏமாற்று வித்தையான ஆணைக்குழுவில் நீதி பேசப்படுகின்றது என்ற தோற்றம் சர்வதேச சமுகத்தின்முன் விரியும். மங்கள முனசிங்க பிரித்தானியாவில் இராஜதந்திரியாகப் பணியாற்றியவர். முழு இனவாதத்தையும் நியாயப்படுத்தி இன அழிப்புக்கு வக்காலத்து வாங்கியவர். அவர் ஒரு ராஜதந்திரி என்ற வகையில் அவரது இந்தச் சாட்சியத்தையும் சிங்கள இராஜதந்திர இலக்குடன் இணைத்து நோக்க வேண்டும்.
ராஜபக்சவின் ஆணைக்குழுவை அவர் புனிதப்படுத்துவதற்காக ஒரு நாடகம் ஆடுகின்றார் என்பதே உண்மை. முன்கதவால் தமிழருக்கு வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு எதிராகச் செயற்படுமாறு பின்கதவால் பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தும் வேலையை சிங்களத் தலைவர்கள் செய்து வந்ததாக நம்பப்படுகின்றது. இப்படி மிக நரித்தனமான, கீழ்த்தரமான ராஜதந்திரப் பாரம்பரியத்தைக் கொண்ட சிங்களத் தலைவர்களிடம் இருந்து ஏதாவது அற்புதம் பிறக்கும் என்று எதிர்பார்பது தவறு.
வின்சன் சேச்சிலிடம் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் ஒன்று உண்டு. அதாவது ‘முதலில் ஓங்கி அறைந்து விட்டுப் பின்பு ‘SORRY’ சொல்லி அணை’ இதில் அடிப்பதும் வெற்றி. பின்பு அணைப்பதாலும் கிடைப்பது வெற்றி. இந்த வகையில் அடிப்பதும் வெற்றி, அணைப்பதும் வெற்றி என்ற இலக்கில் இன அழிப்பைச் செய்த சிங்களத் தலைவர்கள் இப்போது நீதிவான்கள் போல உலகுக்கு தம்மைக் காட்டிக்கொள்ள இப்படி ஒரு போதனையைச் செய்கிறார்கள். இதில் அவர்கள் இரண்டுகால வெற்றியை அல்ல மூன்று கால வெற்றியையும் இலக்கு வைக்கிறார்கள். அதாவது ‘எங்களிடம் நீதிமான்கள் உண்டு. எங்களை நம்பிக் காத்திருங்கள். அதுவே போதும் தமிழா நீ அழிந்து போவதற்கு’ என்பதே அந்தச் செய்தியாகும்.
எனவே கடந்தகாலத்தில் அழிந்தோம், நிகழ்காலத்தில் அழிகிறோம். எனவே எதிர்காலத்திலாவது அழியக்கூடாது என்றால் எந்தவொரு சிங்களத் தலைவனது வார்த்தைகளையும் நாம் நம்பக்கூடாது என்பதே வரலாறு எமக்குக் கற்றுத்தந்த பாடமாகும்.
விக்கிரமபாகு கருணாரட்ண போல ஒரு சில சிங்களவர் இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் ஒரு சக்தியல்ல. அதேவேளை விக்கிரமபாகு கருணரட்ணவின் வழிகாட்டியான வாசுதேவ நாணயக்கார என்பவர் ராஜபக்சாக்களுக்கு கூசா தூக்கும் பணியை மட்டும் செய்பவராக அல்லாமல் அவரது இரத்தக் கரங்களை பன்னீர் கொண்டு துடைக்கும் பணியையும் செய்கிறார் போன்ற உண்மையையும் நாம் காணத் தவறக்கூடாது.
சரத் பொன்சேகா சிறையில் ஞானம் பெறுவது காலத்தின் கோலம். அதே வேளை அவர் மலர்தட்டுடன் நல்லூர் கந்தனிடம் சென்றது ராஜதந்திரத்தின் வேடம். அவ்வாறே மங்கள முனசிங்கவின் ஒப்புதல் வாக்குமூலமும் இராஜதந்திரத்தின் வேடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக