புதன், 25 ஆகஸ்ட், 2010



இக் கட்டுரைத்தொடரின் நோக்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தலைமை தாங்கி முன்னெடுத்து வந்த விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களை அதற்குரிய பின்னணிகளுடன் ஆராய்வதும் அதனூடாக நமது அடுத்த கட்டம் குறித்துச் சிந்திப்பதாகவும் தான் இருந்தது.
இத்தொடரில் ஆராயப்பட்ட விடயங்கள் போராட்டம் தொடர்பான, நமது தோல்வி குறித்த ஒரு முழுமையான ஆய்வு அல்ல.
நமது தோல்விக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்த விடயங்களை அதற்குரிய புவிசார் அரசியல் பின்னணியில் ஒரு பெரிய சட்டகத்தில் இக் கட்டுரைத் தொடர் பொருத்தியிருந்தது.
இதனால் மிக விரிவான தகவல்கள் பலவற்றை வெளிப்படுத்துவதை இக் கட்டுரைத் தொடர் தவிர்த்திருந்தது.
இதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, விரிவான தகவல்களுக்குள் நுழைவதானால் இக் கட்டுரைத் தொடர் மிக நீண்டதாக அமைந்து விடும். இத் தொடர் மிக நீண்டதாக அமைவதனை இக் கட்டுரையாளர் விரும்பவில்லை.
இரண்டாவது, விரிவான தகவல்கள் கட்டுரைத் தொடரை பெரிய சட்டகத்தில் பொருத்துவதற்கு இடையூறாக அமையலாம் என்ற அச்சம்.
இங்கு பெரிய சட்டகத்தில் பொருத்துவது என்பது போராட்டத்தின் அகப்புறக் காரணங்களைக் கவனத்திற்கெடுத்து அவற்றை அனைத்துலகப் பரிமாணத்தில் வைத்து மதிப்பீடு செய்தல் என்ற அர்த்தத்திலேயே குறிப்பிடப்படுகிறது.
இருந்தபோதும் இக் கட்டுரைத் தொடரின் நோக்கத்துக்குப் பயன்படக்கூடிய சில தகவல்களை இக் கட்டுரைத் தொடர் பதிவு செய்து சென்றிருந்தது.
இது மட்டுமன்றி, சில விடயங்களினை தத்துவார்த்தப் பின்னணியுடனும் இக் கட்டுரைத்தொடர் அணுகியிருந்தது.
அதேவேளை, பல இடங்களில் பாய்ந்து குதித்து மிக வேகமாகக் கடந்தும் இக் கட்டுரைத் தொடர் சென்றிருந்தது.
இக் கட்டுரைத்தொடரில் தொட்டுச் சென்ற பல விடயங்கள் மிக விரிவாக எழுதப்படக்கூடியவை.
இக் கட்டுரைத்தொடர் குறித்த கருத்துக்களை வாசகர்கள் பொங்குதமிழ் ஊடாகத் தெரியப்படுத்துவது அடுத்த கட்ட எழுத்து முயற்சிக்கு உறுதுணையாக அமையும்.
*
கட்டுரைத்தொடரின் இப் பகுதியில், மூன்று முக்கிய கேள்விகளுக்குரிய பதிற்குறிப்புக்களை பதிவு செய்து கொள்ள முனைகிறோம்.
இவை மக்கள் பலருக்கு இருக்கும் கேள்விகள்தான்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இறுதிநேரத்திலாவது ஒரு அரசியல் ஏற்பாட்டுக்கு உடன்பட்டு தனது முழுமையான அழிவைத் தவிர்த்துக் கொள்ள முடியாமல் போனது ஏன்?
இறுதிவரை நின்று போராடி அழிந்து போகாமல், ஒரு கரந்தடிப்படையாக மாறி காடுகளை நோக்கி பின்வாங்குவதனை புலிகள் இயக்கம் தவிர்த்தது ஏன்?
முள்ளிவாய்க்கால் மூலைக்குள் போய் புலிகள் இயக்கம் ஒதுங்கிக் கொண்டது ஏன்?
இம் மூன்று கேள்விகளும் ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை. இதேபோல் இவைக்குரிய பதில்களும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவையாகவே அமைகின்றன.
முதலாவது கேள்வியுடன் தொடர்புபட்ட வகையில் இரு வேறு அரசியல் ஏற்பாட்டுத் திட்டங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிப்பட்டுள்ளன.
முதலாவது, இந்திய பொதுத் தேர்தலுக்கான தமிழ்நாடு தேர்தல் வியூகத்தினை திமுக – காங்கிரஸ் கட்சிகள் 2009 ஆம் ஆண்டு தை மாதத்தில் வகுத்தபோது தமது தேர்தல் வெற்றியினை உறுதிப்படுத்த வன்னியில் போர்நிறுத்தம் ஏற்படுவது அவசியம் என உணரப்பட்டு முன்னெடுக்கப்பட்டதாகச் செல்லப்படும் ஒரு அரசியல் ஏற்பாடு.
இவ் ஏற்பாட்டின்படி, இந்திய மத்தியஸ்த்துவத்தின் ஊடாக ஒரு ஏற்புடையதான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி, தீர்வு எட்டப்படும்போது ஆயுதங்களைக் கையளித்து அரசியல் நீரோட்டத்தில் பங்குபற்றுவதற்குத் தயார் என விடுதலைப்புலிகள் இயக்கம் முதலில் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்க வேண்டும்.
அதன் பின்னர் இந்தியா போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவது முதல் பேச்சுவார்த்தைகள் வரையிலான ஏனைய ஏற்பாடுகளை முன்னெடுக்கும்.
இந்த ஏற்பாட்டுக்கு சோனியா காந்தி அங்கீகாரம் வழங்கியதாகவும், இது தொடர்பாக புலிகள் வழங்க வேண்டிய உறுதிமொழிக்கான கடிதநகல் தயாரிக்கப்பட்டு சோனியாவுக்கு வழங்கப்பட்டு அவர் அங்கீகாரம் வழங்கிய பின்னர் அது புலிகள் இயக்கத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் தவல்கள் வெளிப்படுகின்றன.
இவ் ஏற்பாடு குறித்து புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் உள்ள தமக்கு ஆதரவான தலைவர்களுடன் கலந்து பேசியதாகவும், அவர்கள் இந்த ஏற்பாட்டில்; திருப்தியடையவில்லை எனவும், இறுதியில் புலிகள் இயக்கம் இவ் ஏற்பாடு குறித்து ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ எந்தவிதமான பதிலையும் இந்திய தரப்புக்குத் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் இவ் அரசியல் ஏற்பாட்டு முயற்சி முன்னோக்கி நகராமல் அந்த இடத்திலேயே நின்று விடுகிறது.
இரண்டாவது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகள் பொறுப்பாளராக இருந்த கேபி, 2009 மார்ச் மாத இறுதிப் பகுதியில் அல்லது ஏப்ரல் மாத முற்பகுதியில் முன்வைத்ததாகக் கூறப்படும் ஆயுதங்களை Lock off செய்து யுத்தநிறுத்தம் உள்ளடங்கலான ஒரு அரசியல் ஏற்பாடு ஒன்றுக்கு மேற்குலகத்தின் துணையுடன் செல்லும் வகையிலான திட்டம்.
இத் திட்டத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இதனால் இம் முயற்சியும் இந்த இடத்திலேயே நின்று விடுகிறது எனவும் கூறப்படுகிறது.
இத் திட்டங்கள் தொடர்பான மிக விரிவான தகவல்கள் வெளிப்படவில்லையாயினும் விடுதலைப் புலிகள் இயக்கமும் தலைவர் பிரபாகரனும் இத்தகைய அரசியல் ஏற்பாட்டுக்கு உடன்படாமல் விட்டமைக்கான காரணங்களை நோக்குவதற்கு வெளிப்பட்ட தகவல்கள் போதுமானவை.
அடிப்படையில் இவ் அரசியல் ஏற்பாட்டு முயற்சிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபுக்கு முரணானவை.
விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவப் பின்னடைவு நிலையில் இருந்து எந்தவொரு வகையான அரசியல் ஏற்பாட்டுக்கும் செல்லும் மரபினைக் கொண்டிருக்கவில்லை.
விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை போர் நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் அனைத்துமே போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர போராட்டத்தின் முடிவு அல்ல.
இராணுவப் பெரும் பின்னடைவு நிலையில் நிபந்தனைகளுடனான அரசியல் ஏற்பாட்டுக்குப் போவதென்பது தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை முடியாத ஒரு காரியம்.
ஏனெனில் அத்தகைய அரசியல் ஏற்பாடென்பது ஒரு சரணாகதியாக இருக்க முடியுமேயன்றி தமிழீழ இலட்சியத்தை முன்னெடுத்தச் செல்வதற்கு எத்தகைய வாய்ப்புக்களையும் தரமுடியாதவை என்பதே அவரது கருத்தாக இருந்தது.
தமிழீழம் என்ற இலக்கை நோக்கிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் அளிக்கக்கூடிய அரசியல் ஏற்பாடுகள் குறித்துச் சிந்திப்பதற்குப் பிரபாகரன் தயாராக இருந்தாரேயன்றி இலக்கினை திசைதிருப்பக்கூடிய ஏற்பாடுகள் எதற்கும் அவர் தயாராக இருக்கவில்லை.
இராணுவப் பின்னடைவு அல்லது நெருக்கடி நிலைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் முன்னர் சந்தித்த போதெல்லாம் அதனை இரு வகைகளில் கையாண்டிருந்தது.
ஒன்று தொடர்ச்சியாகப் போராடி அந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வருதல்.
இதற்கு 1995 -1996 ஆம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினர் யாழ் குடாநாட்டினைக் கைப்பற்றிய போது ஏற்பட்ட இராணுவப் பின்னடைவு நிலையினை தொடர்ச்சியாகப் போராடி, இதன் மூலம் ஒரு வகையான வலுச் சமநிலையினை- ஜெயசுக்குறுவினை வெற்றி கொண்டும், ஆனையிறவு படைமுகாமினை கைப்பற்றியும், கட்டுநாயக்கா தாக்குதல் மூலம் தென்னிலங்கையினை அதிரவைத்தும், ஆனையிறவினை மீளக் கைப்பற்ற முயன்ற ’அக்னிக்கீல’ படை நடைவடிக்கையினை முறியடித்தும் எட்டியிருந்தமையினை உதாரணமாகக் கூறலாம்.
மற்றது, இலக்கினைத் திசை திரும்ப விடாத முறையில் அமையக்கூடிய அரசியல் நகர்வுகள் மூலம் நெருக்கடி நிலையிலிருந்து மீளல்.
இதற்கு உதாரணமாக, இந்தியப் படைகளுடன் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் சிறிலங்கா அரசுடன் புலிகள் இயக்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியப்படைகள் வெளிறே வேண்டிய சூழலை ஏற்படுத்தி நெருக்கடி நிலையில் இருந்து மீண்டமையினைக குறிப்பிடலாம்.
இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இந்தியப் படைகளுடனான மோதல் காலத்தில் இராணுவப் பின்னடைவு நிலையில் இந்தியாவுடன் பேச்சுக்களுக்குப் போவதற்குத் தலைவர் பிரபாகரன் தயாராக இருக்கவில்லை என்பதே.
இத்தகைய பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அப்போது இந்தியாவில் இருந்த தளபதி கிட்டு விரும்பிய போதிலும் தலைவர் பிரபாகரன் அதனை விரும்பவில்லை.
அவ்வாறு போவது சரணாகதிக்குத்தான் இட்டுச் செல்லும் என்பதுதான் அப்போதும் பிரபாகரனின் கருத்தாக இருந்தது.
இது தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தில் உள்ள உறுதியின் வெளிப்பாடு மட்டுமல்ல அவரின் ஒரு குணாதிசியமும்கூட.
எவர் முன்னும் தலை குனிவது அல்லது பணிவது – அது தந்திரோபாயத்துக்காக இருந்தாலும்கூட அது தலைவர் பிரபாகரனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம்.
மேலும் ஈழத் தமிழர்களது மட்டுமன்றி, உலகத் தமிழ் இனத்தின் மானத்தினதும் வீரத்தினதும் குறியீடாகவும் தலைவர் பிரபாகரன் நோக்கப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சூழலில் வைத்துத்தான் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகளையும் நாம் நோக்க வேண்டும்.
வரலாற்று அழுத்தங்கள் தம்மை இலக்கில் இருந்து திசைதிரும்ப விடாமல் இருப்பதற்காகத் தலைவர் பிரபாகரன் தனக்குத்தானே பூட்டுப் போட்டு வைத்திருந்தாரோ என்று எண்ணும் அளவுக்கு அவர் பல நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தார்.
இதற்கு இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுச் செல்லல் போதும்.
1989 ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி முதலாவது மாவீரர்நாள் நிகழ்வினை போராளிகளுக்கு அறிமுகப்படுத்தி தலைவர் பிரபாகரன் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் போராளிகளுடன் உரையாடுகிறார்.
இவ் உரையாடலில் இலட்சியத்தினைக் கைவிட்டமைக்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அமிர்தலிங்கத்தினை இயக்கம் சுட்டுக் கொன்று தண்டனை வழங்கியமையினைக் குறிப்பிடுகிறார்.
இதனைக் குறிப்பிட்டு விட்டு ‘நாளை பிரபாகரனும் இலட்சியத்தைக் கைவிட்டால் அவரும் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவரே’ என்று ஆயுதம் தாங்கிய போராளிகள் முன்னிலையில் பிரகடனம் செய்கிறார்.
இதன் மூலம் இலட்சியம் தொடர்பாக எந்தவித விட்டுக் கொடுப்புமற்ற சூழலை, பண்பாட்டை இயக்கத்துக்குள் உருவாக்குதற்கான அடித்தளத்தை இவர் இட்டமையினை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
மற்றையது, கரும்புலிகள் தமது இலக்குகள் நோக்கிப் போகமுன்னர் அவர்களுடன் கூடியிருந்து உணவருந்தி அவர்களை வழியனுப்பி வைக்கும் மரபு ஒன்றினை அவர் உருவாக்கியமை.
தனது கையால் உணவளித்து, இலட்சியத்துக்காக தம்மை அழித்துக் கொள்வதற்காக தான் அனுப்பியவர்களின் நினைவு என்றும் தனக்குள் நெருப்பாக கனல வேண்டும் என்று இவர் தீர்மானித்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இதனால் இலக்கு குறித்த நெகிழ்வுத்தன்மை தலைவர் பிரபாகரனிடம் இருக்கவில்லை.
அதனால் வளைந்து நெளிந்தாயினும் தமிழீழம் நோக்கி முன்னோக்கிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய அரசியல் ஏற்பாடுகளைத் தவிர ஏனைய வகையான ஏற்பாடுகள் எதற்கும்  அவர் தயாராக இருக்கவில்லை.
ஆனால் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகள் இயக்கம் தன்னை மீளப்பலப்படுத்தக்கூடிய வகையிலான அரசியல் வாய்ப்புக்கள் எதனையும் வழங்குவதற்கு அனைத்துலகம் உட்பட எவரும் தயாராக இருக்கவில்லை.
உரிமைகள் தொடர்பான கருத்துக்கள் எதுவுமின்றி உயிர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் குறித்துத்தான் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் நாள் இணைத்தலைமை நாடுகள் விடுத்திருந்த அறிக்கையும் குறிப்பிட்டிருந்தது.
இணைத்தலைமை நாடுகளைப் பெறுத்தவரை ‘புலிகள் போர்ப்பாதையைத் தெரிவு செய்தார்கள். இனி அவர்களால் போரில் வெற்றிபெற முடியாது. ஏன் வீணாக மனித உயிர்கள் அழிந்து போக வேண்டும்?’ என்ற கருத்தையே முன்வைத்துக் கொண்டிருந்தார்கள்.
வரலாற்றுபூர்வமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடிமைத்தளையில் சிக்குண்டு போய், தமது விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த ஈழத் தமிழ்த் தேசத்தின் உரிமைக் குரல் இவர்களை ஒன்றுமே செய்யவில்லை.
தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை நிபந்தனையற்ற முறையில் போர்நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் என்பதனைத் தவிர ஏனைய எந்த அரசியல் ஏற்பாடும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை.
இதேவேளை இத்தகைய நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் சிறிலங்கா அரசு முன்வரும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை.
இதனால் அவரைப் பொறுத்தவரை அவருக்கு இருந்த ஒரே தெரிவு இராணுவரீதியாக இருந்த பெரும் பின்னடைவு நிலையை புலிகள் இயக்கத்துக்கு சாதகமாக மாற்றியமைப்பதற்காகச் செயற்படுவதுதான்.
இயக்கத்தினைக் கரந்தடிப் படையணியாக மாற்றுவதனை விட கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றை பேணுவதும் அதனை படிப்படியாக மேலும் விரிவாக்குவதும்தான் இருந்த தெரிவுகளுக்குள் சிறந்ததாக அவர் கருதினார்.
இவரது அந்த முடிவுக்குக் காரணங்கள் இருந்தன.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினைக் கரந்தடியாக மாற்றுவதானால் முதலில் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கைவிட வேண்டும்.
சிறு சிறு பிரிவுகளாக காடுகளுக்குள் பாதுகாப்பான இடம் நோக்கிப் பின்னகர வேண்டும்.
இயக்கத்திடம் இருந்த மரபுசார் ஆயுத தளபாடங்கள் எதிரியின் கைகளில் சிக்கிவிடாது அவற்றை அழிக்க வேண்டும். அல்லது எதிரி கண்டு பிடிக்காத அளவுக்கு பாதுகாப்பாக அவற்றைப் புதைக்க வேண்டும்.
கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டுப் பின்வாங்குவதானால் இயக்கப் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்கள், இயக்கத்துடன் இணைந்து பணியாற்றி வந்த பணியாளர்கள் குடும்பங்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரச கட்டமைப்புடன் இணைந்து பணியாற்றியவர்கள் என ஆயிரக்கணக்கானவர்களை இராணுவத்தின் பிடியில் கொடுத்துவிட வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், காடுகள் நோக்கிப் பின்நகர்வதற்கு காடுகள் பாதுகாப்பானவையாக அமையும் நிலையும் அங்கு இருக்கவில்லை.
காடுகளில் கணிசமானவை இராணுவத்தின் பிடியிலும் ஆழ ஊடுருவும் படையணியிடமும் சிக்கியிருந்தன.
இதனால் சிறு சிறு குழுக்களாக இருந்தாலும்கூட பெரும் எண்ணிக்கையில், போராளிகளை காடுகள் நோக்கி நகர்த்துவது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கவில்லை.
இவ்வாறு காடுகள் நோக்கி நகருவதாயினும் பெரும் எண்ணிக்கையிலான பயிற்சி பெற்ற போராளிகளை இராணுவத்தின் பிடியில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை.
மேலும் மக்கள் இராணுவத்தின் பிடியில் சிக்கிய பின்னர் காடுகளில் உள்ள போராளிகளுக்குத் தேவையான வழங்கல் என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும்.
தம்மைத் தேடியழிக்க முனையும் இராணுவத்துடனும் ஆழ ஊடுருவும் படையணியுடனும் மோதிக் கொண்டு நடமாடும் குழுக்களாகத் திரிய வேண்டிய சூழலும் இருந்தது.
இத்தகைய ஒரு நிலையில், இருக்கும் சக்தியனைத்தையும் பயன்படுத்தி, கரும்புலிகளையும் கூடுதலாக ஈடுபடுத்தி, இராணுவத்தினருக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தி- அவர்களை குறிப்பிட்டளவு தூரம் பின்னோக்கித் தள்ளி கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விரிவாக்கிப் பேணிய வண்ணம் போரை எதிர்கொள்வது ஒப்பீட்டளவில் சாதகமானது என பிரபாகரன் கருதினார்.
போரை நெருங்கி நடாத்தும் நிலை வரும்போது தமது கனரக ஆயுதங்களின் வலிமையினை சாதகமாக்கும் வாய்ப்பு சிறிலங்கா படையினருக்கு குறைவாக இருக்கும் என்றும் கணிப்பிடப்பட்டது.
இத் தந்திரோபாயத்துடன்தான் கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் விடுதலைப்புலிகளால் சமர்க்களம் எதிர்கொள்ளப்பட்டது.
இதேவேளை நிபந்தனையற்ற போர்நிறுத்தம் கோரி தமிழகத்திலும் புலத்திலும் எழுச்சிகரமான மக்கள் போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் புலிகளுக்கு சாதகமாக அமையும் வகையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்படுவதற்கு ஏற்ற சாதகமான உலக அபிப்பிராயம் இருக்கவில்லை.
போர்முனையில் இருந்து மக்களைப் பாதுகாப்பது என்ற சிந்தனை மட்டும்தான் உலகமட்டத்தில் எழுந்தது.
போர்முனையில் இருந்து மக்களை வெளியேற்றுவது, பாதுகாப்பு வலயங்கள் அமைப்பது போன்ற கருத்துக்களே கூடுதலாகப் பேசப்பட்டன.
போர் நீள நீள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப்பகுதி சுருங்கிச் சுருங்கி வரத் தொடங்கியது.
சில முனைகளில் புலிகள் அமைப்பு மேற்கொள்ள முயன்ற ஊடறுப்புத் தாக்குதல் எதிர்பார்த்த வெற்றியினைக் கொடுக்கவில்லை.
சிறிலங்கா அரசும் மக்களுக்கான பாதுகாப்பு வலயங்கள் எனக்கூறி சில தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை அறிவித்து அறிவித்துப் போரைத் தொடர்ந்தது.
எறிகணைகள் துரத்தத் துரத்த மக்களும் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்ற எண்ணத்தில் சிறிலங்கா அரசு தெரிவு செய்து அறிவித்த பாதுகாப்பு வலயங்களுக்குள் நகரத் தொடங்கினர்.
மக்கள் எனும் நீர் போகும் இடமெங்கும் புலிகளாகிய மீன்களும் இணைந்தே சென்றன.
முள்ளிவாய்க்கால் உட்பட கடற்கரையையொட்டிய வெறுந்தரைப் பிரதேசத்தில் மக்களும் புலிகளும் ஒதுங்கிக் கொண்டனர்.
இப் பிரதேசம் புலிகள் தெரிவு செய்த பிரதேசம் அல்ல. சிறிலங்கா அரசால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசமே.
இருந்தபோதும் இப் பிரதேசம் கடற்கரையுடன் சேர்ந்ததாக அமைந்தமையினை ஒப்பீட்டளவில் சாதகமாகவே புலிகள் அமைப்பு நோக்கியது.
வகுக்கப்பட்டிருந்த திட்டங்களின்படி தளபதி தீபனின் ஒருங்கிணைப்பில் பாரிய ஊடுருப்புத் தாக்குதல்கள் இடம்பெற இருந்தமையும், அவற்றின் மூலம் இராணுவத்தினருக்குக் கணிசமான இழப்பினை ஏற்படுத்தி குறிப்பிட்டளவு பிரதேசங்களை மீட்டெடுக்க முடியும் என்ற கணிப்பீடு இருந்தமையும் காரணமாக குறுகிய பிரதேசத்தில் ஒதுங்குவது தொடர்பாக அச்ச உணர்வு ஆரம்பத்தில் பெரிதாக எழவில்லை.
உண்மையில் சாவா வாழ்வா என்பதைத் தீர்மானிக்கும் களமுனையாக புதுக்குடியிருப்புப் பகுதி மாறியது.
தலைவர் பிரபாகரனும் களமுனையில் நின்று களத்தை வழிநடாத்தத் தொடங்கி விட்டார்.
ஓரிரு ஊடறுப்புத் தாக்குதல்களில் இராணுவத்தினருக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதோடு இராணுவத்தினரின் படைக்கலன்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர்.
இருப்பினும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் சுருங்கியமை சிறிலங்கா படையினருக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.
அவர்கள் தமது பெரும் எண்ணிக்கையிலான படையணிகளை குறுகிய பிரதேசத்தில் செறிவாகப் பயன்படுத்தும் வகையில் தமது படையொழுங்கமைப்பை மேற்கொண்டனர்.
இத்தகையதொரு சூழலில்தான் போரில் புலிகள் அமைப்பின் தோல்வியைத் தீர்மானித்த தளபதி தீபன் உட்பட முக்கியமான தளபதிகள் போராளிகள் உள்ளடங்கலான ஏறத்தாழ 500 வரையிலான போராளிகளை தமிழீழம் இழந்த ஆனந்தபுரம் முற்றுகை இடம்பெறுகிறது.
இதன் பின்னர் படையினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி பின்வாங்கச் செய்யும் புலிகள் அமைப்பின் திட்டத்தை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலே போய் விட்டன.
*
இக் கட்டுரைத் தொடரில் இதுவரைகாலமும் இடம் பெற்ற பகுதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தோல்விகளுக்கு காரணமாக இருந்த பல்வேறு வகையான அகப் புறக் காரணங்களை நோக்கியிருந்தோம்.
ஈழம் தோல்வி கண்டதா என்ற கேள்விக்கு விடையாக அகக் காரணங்களையும் தோற்கடிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு விடையாகப் புறக்காரணங்களையும் நோக்கினால் இக் கட்டுரைத்தொடரின் தலைப்புக்கான காரணம் புரிந்து விடும்.
நாம் முதல் அங்கத்தில் குறிப்பிட்டவாறு நமது தோல்வி குறித்து நாம் ஆராய்வது சுருண்டு படுத்துத் துவண்டு விடுவதற்கல்ல.
மாறாக இது நமது அடுத்த கட்டப் போராட்டம் குறித்து ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதற்கே.
நாம் தற்போது வந்து சேர்ந்துள்ள இடத்தின் நிலை பற்றி மதிப்பீடு செய்து நாம் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த சில குறிப்புக்களுடன் இக் கட்டுரைத் தொடரை நிறைவு செய்வதுதான் கூடுதல் பொருத்தமானதாக இருக்கும்.
(அடுத்த பகுதியுடன் நிறைவுறும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக