வியாழன், 5 ஆகஸ்ட், 2010

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து கடந்த மாதம் 723 புலிகள் கைது - சிறிலங்கா பிரதமர் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 03 ஓகஸ்ட் 2010, 17:06 GMT ] [ கார்வண்ணன் ]
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து கடந்த மாதம் மட்டும் 723 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா பிரதமர் டி.எம். ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றதில் இன்று பிற்பகல் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“கடந்த மாதம் மட்டும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து 723 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 765 பேரும், 74 பேர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட புலிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புலிகளுக்குச் சொந்தமான வீடுகள், வணிக நிலையங்கள், காணிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

புலிகள் மீள் எழுச்சி பெறுவதைத் தடுக்கவும், நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்கும் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்“ என்று பிரதமர் டி.எம் ஜெயரட்ண மேலும் தெரிவித்தார்.
முகப்புஅச்சுப்பிரதிநண்பருக்கு அனுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக