வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பாருங்கோ

தமிழர்களும்; துரோகிகளும்( தீதும் நன்றும் பிறர்தர வாரா)
விக்டர் - சிட்னி
ஈழத்து அரசியல் வரலாறு துர்அதிஸ்டவசமாக துரோகிகளாலேயே தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. ஓரு காலத்திலே தமிழ் தலைவர்களாக ஏற்றி போற்றிப் புகழப்படுபவர்கள் பின்னர் அடுத்த கட்ட தலைவர்களால் துரோகிகளாக இனங்காணப்படுவது எமது வரலாற்றில் நீண்ட காலமாக விரவிக்கிடக்கும் பண்பாடு. நாம் அறிந்த வரை வரலாற்றில் பின்னோக்கிப் போனால் துரோகிப்பட்டத்தை முதல்முதல் பெற்ற பெருமைக்குரியவர்; சேர் பொன் இராமநாதன் அவர்களே. தமிழர் நலனை பதவி பட்டங்களுக்காக தாரை வார்த்துக் கொடுத்த மேல் தட்டு வர்க்க துரோகியாகவே பின்னாளில் வந்த பொன்னம்பலம்; போன்ற தலைவர்களால் அவர் விமர்சிக்கப்பட்டார். பின்னர் அதே பொன்னம்பலம் அடுத்து வந்த அமிர்தலிங்கம் போன்றோர்களால் துரோகியானார். தனது இயலாமையால் செல்வநாயகம் துரோகிப் பட்டத்திலிருந்து தப்பிவிட்டார். இரத்தத் திலகங்களும் வீரவாளும் வழங்கப்பட்டு தமிழர் தளபதியாகக் கருதப்பட்ட அதே அமிர்தலிங்கம் அவருக்குப் பின்னால் வந்தவர்களால் துரோகியாக்கபட்டு பலிவாங்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே.
பிரபாகரனுக்கு இந்தக் கொடுப்பினை வாய்க்காதது அவருடைய துர் அதிஸ்டமே. எல்லோரையும் பலி கொடுத்த பின்னர் அமெரிக்காவோ ஐரோப்பாவோ இல்லாவிட்டால் இந்தியாவோ வந்து தங்களை காப்பாற்றிக் கரைசேர்க்கும் என்றுதான் கடைசிவரை அவர் நம்பியிருந்ததாகத் தகவல். அப்படி நடந்திருந்தால் மாதுரோகி பட்டத்தை இலேசாகத் பெற்றிருப்பார். மகிந்தாவின் இராஜ துரோகத்தால் மாதுரோகி பட்டம் அவரிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டுவிட்டது. இன்று தப்பிப் பிழைத்த அவருடைய தம்பிகளும் புலன் பெயர்ந்த அவருடைய தேசிய வாரிசுகளும் துரோகிப் பட்டத்துக்காக முண்ணியடிப்பதை கண்டிருந்தால் ஆனந்தக் கண்ணீர் சொரிந்திருப்பார். அவர் வகுத்த அரசியல் கோட்பாட்டை இம்மியளவும் பிசகாமல் தொடர்ந்து முன்னெடுக்கின்ற தொண்டரடிப் பொடியார்களை எண்ணி யாருக்குத்தான் உள்ளம் உருகாது.
புலன் பெயர்ந்த இளசுகள் ஈழத்திலுள்ள தேசியக் கூட்டமைபினருக்குத்தான் முதல் முதலில் துரோகிப் பட்டத்தை கொடுத்தனர். அது வெகுவிரைவிலே புற்று நோய்போல் பரவி தேசியத்துக்காக கொடி பிடித்த எல்லோரையும் மாறி மாறி துரோகிகள் என அடையாளம் காட்டுவதில் வந்து நிக்கிறது. இவர்கள் இப்போதல்ல எப்போதுமே துரோகிகள்தான் என ஆதாரங்களை வெப் எங்கும் தூவிவிருகிறார்கள். இந்தத் துரோகிகளால்தான் ஈழமே நாசமாய்ப் போனதாக வசை பாடுகிறார்கள். ஆக தப்பிப் பிழைத்த தளபதிகளும் புலன் பெயர்ந்த தலைவர்களும் மிச்சம் மீதியில்லாமல் துரோகிகளாக்கப்ட்டுள்ளார்கள். அப்படியானால் அவர்களுக்கு முன்னாலேயே பிரிந்து சென்று அரசுடன் இணைந்த கருணாவும் பிள்ளையானும் முன்னோடிகள் தீர்க்கதரிசிகள் என்றுதான் அழைக்கப்பட வேண்டும்.
மண்டையில் ஒன்றுமில்லாதவன் தலைவனானாலும் அவன் பாதையில் மந்தைபோல் சொந்த புத்தி எதுவுமில்லாமல் தொண்டு செய்பவனே மானமுள்ள ஈழத்தமிழன் மந்தையில் இணைய மறுத்தால் துரோகிகளாக்கப்படுவீர்கள். துரோகிகளுக்கு மண்டையில் போடுபவர்கள் இன்று இருந்திருந்தால் ஈழத்தமிழர்களில் குறிப்பாக புலன்பெயர்ந்தவர்கள் யாராவது எஞ்சியிருப்பார்களோ என்பது சந்தேகம். ஓரே தலைவன் மாயமாய் மறைந்ததும் அவிட்டு விடப்பட்ட மந்தைகள் போல் திசைக்கொரு பக்கமாய் ஓடி கூட்டம் சேர்த்து தாமே தலைவராய் ஒவ்வொரு திக்கிலிமிருந்து ஊளையிடுகிறார்கள். தங்களுக்கு வாக்களிக்கச்சொல்லும் தமாசுகள் வேறு. சில தமிழர்கள் சீரியசாகவே போய் வாக்களித்தது அதைவிடத் தமாசு. கொள்கைகள் பேசுவதை விட்டுவிட்டு அடுத்தரை துரோகி என்று பட்டம் சூட்டுவதிலேயே அக்கறையாக இருக்கிறார்கள் புலன் பெயர்ந்த தமிழ் புதுத் தலைவர்கள். முப்பது வருடமாக அவரகள் கற்ற அரசியல் பாடம் வேறு என்ன. தலைவன் எவ்வழி தொண்டர் அவ்வழி.
மாற்றுக் கருத்துகளுக்கு இடமளியாத சுயநலமும் இனவாதமும் தலைவிரித்தாடிய தமிழரின் அரசியல் போக்கால் அவர்கள் இழந்தது இன்று ஈழத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்த சிந்தனைப்போக்கை புகலிடங்களிலும் குறிப்பாக இளைய சமூதாயத்தினரிடமும் ஊட்டி வளர்ப்பதால் என்ன விளையும் என்பது இப்போது புரியாது. சிந்தனை வறுமையும் குறும் இனவாத போக்கும் கொண்ட பின்தங்கிய சமூகமாக தமிழரை உலகம் கருதும் நிலை வரும் அறிகுறிகள் இன்று நிறையவே இருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இன்றைய உலகில் எமது ஊத்தைகளை வெற்றிகரமாகவே வெப்பினூடாக பறைசாற்றிக ;கொண்டிருக்கிறோம். பல நூறு வருடங்களுக்கு முன்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய தமிழன் இன்று துரோகி துரோகி என்று தங்களை தாங்களே தூற்றிப் பாடுகின்றான். அடுத்தவரிகளில் அதே கவிஞன் சொன்னது போல தீதும் நன்றும் பிறர்தர வாரா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக