வியாழன், 12 மே, 2011

சரணடைய மறுத்த சூசை – கடற்படை அதிகாரி


Thursday, May 12, 2011, 9:51

இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்  புலிகளின் கடற்படைத் தளபதி சூசையை சரணடையுமாறு அவரது மனைவி மூலம்   கடற்படை தளபதி ஒருவர் அழுத்தம்கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் படையினருடன் இணைந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த  அரச ஊடகவியலாளர்களில் ஒருவரும், தகவல் திணைக்களப் பணிப்பாளருமான வசந்தபிரிய ராமநாயக்கவே சிங்கள நாளிதழில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போரின் இறுதிக்கட்டத்தில் நடுக்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் படகொன்று கடற்படையினரால் வழிமறித்துப் பிடிக்கப்பட்டது. குறித்த படகில் விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் குடும்பத்தினர் இருந்தனர். அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லவே முயன்றனர்.
இதேவேளை சூசை படையினருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.  படகில் வந்த சூசையின் குடும்பத்தினரிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டபோதே சூசை புதுமாத்தளனில் போரிட்டுக் கொண்டிருந்த விடயம் தெரியவந்தது.
சூசை உங்களுடன் வரமாட்டாரா என்று அவரது குடும்பத்தினரிடம் கடற்படை அதிகாரிகள் கேட்டதற்கு அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி  தனது கைத்தொலைபேசியை சூசையின் மனைவியிடம் கொடுத்து  சூசையுடன் பேசுமாறு பணித்தார்.
சூசையையும் தம்மிடம் வந்து சரணடையுமாறு அவரது மனைவி மூலம் அந்தக் கடற்படை அதிகாரி அழுத்தம் கொடுத்தார்.  ஆனால் சூசை சரணடையவில்லை. அவர் தீர்க்கமான எண்ணத்துடன் போரில் ஈடுபட்டதாக வசந்தபிரிய ராமநாயக்க குறித்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
சூசையை அவரது மனைவி மூலம் சரணடைய அழுத்தம் கொடுத்த கடற்படை அதிகாரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக