செவ்வாய், 31 மே, 2011

சேனல் 4 வீடியோ உண்மையானது'


 
இலங்கையில் போர்க் குற்றம் ஆதாரமாகக் கருதப்படும் வீடியோ
இலங்கையில் போர்க் குற்றம் ஆதாரமாகக் கருதப்படும் வீடியோ
இலங்கைப் போர்க்குற்றம் குறித்த முக்கிய ஆவணமாகக் சித்தரிக்கப்படும் சேனல் 4 வீடியோ ஆதாரங்கள் உண்மையானவை என்று தெரிவித்துள்ள ஐ நாவின் சிறப்புத் தூதர், இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இதை ஆராய சுயாதீன சர்வதேச விசாரணைக் குழு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நிராயுத பாணிகளாக இருந்தவர்களை இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்வதுபோல காட்டும் ஒரு வீடியோவை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி பல மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பியது. இந்த வீடியோ பொய்யானது என்றும் மாற்றம் செய்ய்ப்பட்டது என்றும் இலங்கை அரசு நிராகரித்திருந்தது.
ஆனால் தற்போது சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் உண்மையானவை என்று சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான ஐ நாவின் சுயாதீன நிபுணரான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சட்ட பேராசிரியர் Christof Heyns தெரிவித்துள்ளார் அவரது ஆய்வறிக்கையின் முக்கிய பகுதிகளை இங்கே காணலாம்.
சிறப்புத் தூதரின் அறிக்கை
இலங்கை போர் முடிவடைந்த சில மாதங்கள் கழித்து நிர்வாணப்படுத்தப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தவர்களை சிப்பாய்கள் சுட்டுக் கொல்வது போன்ற வீடியோ காட்சிகள் சேனல் 4 இல் ஒளிபரப்பப்பட்டன. இலங்கை அரசின் மீது போர் குற்ற விசாரணை தொடர்பாக அழுத்தங்கள் வர ஒரு முக்கிய சம்பவமாக இருந்த இதன் பின்னணி ஐ நா சிறப்புத் தூதரின் அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
போர் குற்றத்துக்குள்ளானதாக கூறப்படும் ஒருவரின் படம்
போர் குற்றத்துக்குள்ளானதாக கூறப்படும் ஒருவரின் படம்
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி சேனல் 4 இது தொடர்பான முதல் வீடியோவை ஒளிபரப்பியது. இந்த வீடியோ குறித்து ஆராய்ந்த ஐ நாவின் அப்போதைய சிறப்புத் தூதர் பிலிப் ஆல்ஸ்டன், போர் குற்றம் நடந்துள்ளதா என்பது குறித்து ஒரு பக்க சார்பற்ற விசாரணை தேவை என்பதையே இந்த ஆதாரம் உணர்த்தியுள்ளதாக பரிந்துரைத்தார்.
ஆனால் இந்த வீடியோ குறித்து ஆராய இலங்கை அரசு தனியாக ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. அந்த நிபுணர்கள் சேனல் 4 இல் வெளியிடப்பட்ட வீடியோ ஆதாரங்கள் போலியானவை என்று கூறினர். இது தொடர்பாக சில கேள்விகளையும் அவர்கள் எழுப்பினர்.
மேலும் வீடியோ
அதன் பிறகு சில மாதங்களுக்குப் பின்னர் சேனல் 4 இந்த வீடியோவின் நீண்ட பகுதியை ஒளிபரப்பியது. சுமார் 5 நிமிடம் வரை செல்லும் அந்த வீடியோ ஐ நாவிடம் தரப்பட்டுள்ளது. அது சரியானதா என்பதை பல்வேறு சுயாதீன நிபுணர்களை துணை கொண்டு ஐ நா ஆராய்ந்துள்ளது. தடயவியல் நோயியல் நிபுணர் டேனியல் ஸ்பிட்ஸ், தடயவியல் ஆயுத பயன்பாட்டு நிபுணர் பீட்டர் டியாக்சுக், தடயவியல் சார் வீடியோ ஆய்வாளர் கிரான்ட் பெட்ரிக்ஸ் மற்றும் ஜொப் ஸ்பிவாக் ஆகியோரின் கருத்துக்கள் கேட்டப்பட்டன.
இந்த நிபுணர்கள் வீடியோ உண்மையானது என்று கூறியுள்ளனர். மேலும் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து இலங்கை நிபுணர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.
இசைப்பிரியா மற்றும் சார்லஸ் சடலங்கள்?
போர் குற்றம் தொடர்பான ஐ நாவின் சிறப்பு தூதரிடம் இந்த வீடியோ ஆதாரம் மட்டுமல்லாது, இலங்கையின் இறுதி கட்டப் போரில் நடைபெற்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான புகைப்படங்களும், பிற ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. செய்தியாளர் இசைப் பிரியாவைப் போலத் தோன்றும் ஒருவரின் சடலம் இருப்பதை இரண்டாவதாக ஒளிபரப்பப்ட்ட வீடியோவில் பதிவான காட்சி காட்டுகிறது. அதே போல இந்த வீடியோவின் இறுதியில் இருக்கும் ஒரு சடலம் பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனியின் உடலோடு ஒத்துப் போவதாக இருக்கிறது. இந்தச் சடலத்தைக் காட்டும் வேறு படங்களும் ஐ நாவிடம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே போல சேனல் 4 அளித்த மற்றுமோர் வீடியோ ஆதாரத்தில் நிர்வாணமாக இருக்கும் பெண்களின் சடலங்களை அரச படையினர் போலத் தோன்றுபவர்கள் அகற்றுவது போல் உள்ளதாகவும் ஐநா அறிக்கை கூறியுள்ளது..
போர்க் குற்ற விசாரணைக்கு எதிராக ஐநா அலுவலகம் முன்பால இலங்கையில் ஆர்ப்பாட்டம்
போர்க் குற்ற விசாரணைக்கு எதிராக ஐநா அலுவலகம் முன்பால இலங்கையில் ஆர்ப்பாட்டம்
ஆனால் சேனல் 4 இல் காட்டுப்பட்ட 5 நிமிடங்கள் நீடிக்கும் இரண்டாவது வீடியோ காட்சியும், பிற ஆவணங்களும் சிறப்புத் தூதரால் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்றும் அதற்கு அவருக்கு அளிக்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அதிகார வரம்பே காரணம் என்றும் ஐ நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் இலங்கை அரசுக்கோ இது குறித்து விசாரிக்கும் திறன் படைத்த சர்வதேச நிறுவனங்களுக்கோ தேவைப்பட்டால் வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் இலங்கை அரசு இதுவரை இந்த வீடியோ தொடர்பாகவோ, இதில் இருக்கும் ஆதாரங்களால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தோ முழுமையாக சிந்தித்து நடக்கவில்லை என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.
''இந்த வீடியோ பதிவில் மிக மோசமான குற்றங்கள் பதிவாகியுள்ளன அது நிச்சயமாக போர் குற்றங்கள்'' என்று ஐ நா அறிக்கையின் முடிவில் கூறப்பட்டுள்ளது. போர்க் களத்தில் வேறு சிப்பாய்களும் தமது செல்போன் மூலமாக படங்களை எடுப்பது இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. எனவே இந்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக வேறு ஆதரங்களும் கிடைக்க வாய்ப்புண்டு என்கிறது ஐ நா.
இந்த ஆதாரங்களை ஒன்று சேர்த்து விசாரணை செய்வதன் மூலம் போரின் இறுதி கட்டத்தில் என்ன நடைபெற்றது என்பதைக் கண்டறிய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிப்பாய்களின் முகங்கள் தெளிவாக பதிவாகி இருக்கிறது. இறுதி கட்டப் போருக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகள் மூலம் சம்மந்தப்பட்ட சிப்பாய்களின் விபரங்களைப் பெறலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற படுபாதகமான செயல்கள் தொடர்பான நிராகரிக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் நிலையில் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது சம்மந்தப்பட்ட நாட்டின் பொறுப்பு என்றும் இது போன்ற விடயங்களில் தொடர்புடையோர் தண்டிக்கப்படாமல் தப்புவது என்பதை சர்வதேச சமூகம் ஏற்க முடியாது என்றும் ஐ நா தூதரின் அறிக்கை கூறுகிறது.
இலங்கை குறித்து விமர்சனம்
ஆனால் இது போன்ற சம்பங்கள் ஏதுவுமே நடக்கவில்லை என்று கூறவதன் மூலமோ, அல்லது அரசோடு தொடர்புடையவர்களை வைத்து ஒரு குழுவை அமைத்து அதன் முடிவை சர்வதேச சமூகம் ஏற்கும் என்று நம்பிக்கையில் இருப்பது ஒரு நாடு தனது கடமையை நிறைவேற்றியதாக ஆகாது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு இது தொடர்பாக விசாரணை செய்யும் அதிகாரங்களோ, சர்வதேச மனிதநேய சட்டங்கள் மீறப்பட்டதா என்று பார்க்கும் அதிகாரங்களோ அளிக்கப்பட்டிருக்கவில்லை. அதன் செயல்பாடுகளும் இது தொடர்பான விடயங்கள் குறித்து அது ஆராய்வதாக இல்லை என்று கூறியுள்ள சிறப்புத் தூதர், உள்நாட்டில் நடக்கும் விசாரணைகளில் இருக்கும் குறைபாடுகளைக் களைவதற்கானா நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து விசாரணை அதிகாரங்களைக் கொண்ட சுயாதீன சர்வதேசக் குழுவை அமைக்க முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். போர் குற்றங்களுக்குத் தேவையான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சாத்தியக் கூறு குறித்து இந்தக் குழு பரிந்துரை வழங்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் இலங்கை அரசோ அதனைச் சார்ந்த அமைப்புக்களோ போர் குற்றங்களை இழைத்தது என்ற நோக்கோடு இந்த பரிந்துரைகள் வழங்கப்படவில்லை என்றும் யார் குற்றம் இழைத்தவர்கள் என்பதை கண்டறியவேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மோசமான குற்றங்கள் இலங்கைப் போரில் நடைபெற்றுள்ளன என்பதைத்தான் இந்த வீடியோ ஆதாரங்கள் காட்டுவதாக அறிக்கை கூறியுள்ளது. இறுதிக் கட்டப் போரில் நடந்துள்ள படுகொலைகளுக்கு யார் பொறுப்பாளி என்பதை கண்டறியக் கூடிய தெளிவான அதிகார வரம்பு கொண்ட, ஆதாரங்களை தொழில் நோக்கோடு பார்க்கக் கூடிய உள்ளூர் நிபுணர்களும், சுயாதீன சர்வதேச நிபுணர் விசாரணைக் குழுவும் இந்த வீடியோ ஆதாரங்களையும் இன்ன பிற ஆதாரங்களையும் முறையாக ஆராய்வதன் மூலமே உண்மையை வெளிக் கொண்டு வரமுடியும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக