ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நன்றி மறு ஆய்வு


எங்கே பிழைத்தது எமது அரசியல் அடித்தளம்

ஏன்? – -
தமிழரின் அரசியல் வரலாற்றில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருந்தும்.மண் தோன்றா கல் தோன்றிய காலத்து மூத்த குடிகள் நாமென வீர வசனம் பேசி ஒரு அரசியல் மாயையை தோற்றுவித்ததும் தமிழரின் இந்த நிலைக்கு காரணம்.
இன்று எல்லாத் தமிழர்களின் மனங்களிலும் ஒரு கேள்வி எழுந்து நிற்கின்றது.’ஏன் எம்மினத்தின் நிலை இப்படியானது?’ என்பதே.
ஏன் என்ற இந்த கேள்வி தாயகத்தில் வாழுகின்ற எம்மவர்களின் மனங்களின் முட்டி மோதி, ஆவல்களும் உணர்வுகளும் சொற்களும் தொண்டைக்குழி வரை வந்து கருத்துச் சுதந்திரம் அற்ற நிலையில் உணர்வுகள் உருக்குலைந்து பெருமூச்சுகளாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஏன்….ஏன்..ஏன் கேள்விகள் சரமாரியாக எழுகின்றன.
ஏன்? ……ஏன்? ….என்?..
எம்மினத்தின் இந்த நிலைக்கு யார் காரணம்?. அவர் இவர் என்று எமது விரல்கள் எமக்கு விருப்பமில்லாதவர்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கின்றன.
எம்மினத்தை இந்நிலைக்கு கொண்டு வந்தமைக்கு நாமெல்லோருந்தான் காரணம்.எங்கே பிழைத்தது எமது அரசியல் அடித்தளம்.இலங்கையரசு எமது இனத்தின் மீது கொண்ட அத்தனை அடக்குமுறைக்கும் எமது எதிர்ப்புகள் இராஜதந்திரமற்ற முறையில் நேரிடையான எதிர்ப்பாகவிருந்தன அவைதான் காரணமா?.அரசியலில் அளவுக்கு மீறிய சத்தியத்தையும் நீதியையும் கடைப்பிடித்தோமே அதுதான் எமது தோல்விக்கு அல்லது பின்னடைவுக்கு காரணமா?.
நாங்கள் நிறையவே புத்திசாலிகள் மோட்டுச் சிங்களவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்ற  எமது அகங்காரமும் எம்மைப் பற்றிய அதீதமான நம்பிக்கையுந்தான் காரணமா?.
நாம் எமது அரசியலில் சாண் ஏற சிங்கள அரசியல்வாதிகள் முழமேறி எமது அரசியலை நாசூக்காக மழுங்கடித்தமையை உணர்ச்சிப் பிழம்பாக மேடைகளில் விட்டேனா பார் என்று முழங்கினோமே அந்த வெற்று முழக்கங்கள்தான் இந்த நிலைக்கு எம்மை கொண்டு வந்தவனவா?
நாம் எந்த இடத்திற்குப் போக வேண்டுமோ அந்த அரசியல் இலக்கை அடைவதற்கு சாணக்கிய அறிவைப் பயன்படுத்தினோமா?இல்லையே.
நாம் எப்பொழுது எமது அரசியலை நகர்த்துவதற்காக எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் ஒற்றுமையானோமா?. ஒரு அரசியல் அணி உரிமைக்காக போராடுகையில் இன்னொரு அரசியல் அணி தமிழர்களுக்கு எல்லாம் கிடைத்தவிட்டதே இவர்கள் எதற்காக இப்படித் தேவையில்லாத விடயங்களில் ஈடுபடுகிறார்கள் என அரசிடமே சொன்னார்களே!.
அரசையே புரட்டிப் போடும் ஆற்றலும் அறிவுமுள்ள நமது அரசியல்வாதிகள் தமது ஒற்றுமையின்மையால் தமிழரின் உரிமைப் போரை நீண்ட காலத்திற்கு கொண்டு சென்றார்கள்;.
அடங்காத் தமிழன் என்ற பழுத்த அரசியல்வாதியான அமரர் சி.சுந்தரலிங்கம்  தனது அறிவை தீண்டத்தகாதவர் என வேலி போட்டு ஆலயப் போராட்டம் நடத்தினார். நான் இதனை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் பார்த்தேன்.இதுதானா தமிழரின் அரசியல்.
தமிழரின் அரசியல் வரலாற்றில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருந்தும்.மண் தோன்றா கல் தோன்றிய காலத்து மூத்த குடிகள் நாமென வீர வசனம் பேசி ஒரு அரசியல் மாயையை தோற்றுவித்ததும் தமிழரின் இந்த நிலைக்கு காரணம்.
தமிழரின் சரித்திரம் வேறு சமகாலத்தில் நகர்த்த வேண்டிய அரசியல் வேறு என்பதை நாங்கள் ஏன் உணரவில்லை.அரசியல் அணுகுமுறைகள் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவம் பெற்றதை பெற்று வந்ததை நாம் உணர்ந்திருக்கிறோமா?.
இன்றும் பலரிடம் பேசும் போது அவர்கள் மாயஜால கதைகளையே கதைக்கிறார்கள்.விசயம் இருக்குது எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்கிறார்கள். ஒரு காலத்தில் உசுப்பேத்தல் அரசியல் இருந்தது, இப்பொழுது விசயம் நடந்து கொண்டிருக்கின்றது என்கிறார்கள்.
கேட்பவர்கள் என்ன விசயமப்பா என பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்.இப்ப நாங்கள் செய்ய வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி உதிரிக்கட்சி அரசியல்வாதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்து ஒரு பலமான சக்தியாக உருவாக்க வேண்டுமென்பதே. உடனே அரசுடன் ஒட்டுறவாடுகிறார்களே என்று துரோகிப்பட்டம் சூட்ட முயற்சிக்கிறார்கள்.
எங்களுடைய வாயிலிருந்து ஒரு சொல் வேகமாக வந்துவிடும்.அது துரோகி என்ற சொல்தான்.எந்த அரசியல்வாதியையும் விமர்சிக்கலாம் ஆனால் துரோகி என்று சொல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
எல்லாம் எங்களுடைய பார்வைக்குள் எங்கள் கைகளுக்குள் இருக்க வேண்டும் எனச் சிலர் நினைக்கிறார்கள். ஆக மிகப் பெரிய தவறாகும்.தாயகத்தில் அங்குள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு அரசியலை நகர்த்துகின்றது.அதனை வரவேற்போம்.
அதே போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் செய்ய வேண்டியதைச் செய்கின்றன.செய்யட்டும்.
சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு உரிமை கொடுக்கக்கூடாதென்பதில் எவ்வளவு ஒற்றுமையாகவிருக்கின்றார்கள். ஏன் எம்மால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை?.தடையாயிருப்பது என்ன?.
எம்மினம் என்பதற்கப்பால் தனிமனித வரட்டுக் கௌரவம் பார்ப்பது.
விட்டுக் கொடுக்காமை,சகிப்புத்தன்மையுடன் நடக்காமை.
ஏன் நாங்கள் இப்படி இருக்கின்றோம்?
-ஜெயதாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக