வியாழன், 27 ஜனவரி, 2011

நன்றி மறு ஆய்வு


எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!!

“ஊழல், வேலையில்லாப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, இவற்றை எதிர்த்தே போராட்டத்தில் குதித்துள்ளேன். எமது சிறிய கனவுகளைத் தான் கேட்டுப் போராடுகிறோம்.” – கெய்ரோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 26 வயது இளைஞனான ரத்வா கபாணி.
எகிப்தில் முபாரக்கின் முப்பதாண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வருகின்றதா? ஜனவரி 25 ம் தேதி, எகிப்தில் “தேசிய போலிஸ் தினம்” என்பதால், அன்று விடுமுறை. ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தலைநகர் கெய்ரோவில் மட்டுமல்லாது, அலெக்சாண்ட்ரியா போன்ற பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. எகிப்தில் பல தசாப்தங்களாக, இந்தளவு மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் எதுவும் இடம்பெறவில்லை. கலவரத் தடுப்பு போலிசின் பிரசன்னத்தைக் கண்டு அஞ்சாமல், மக்கள் ஆக்ரோஷமாக போராடினார்கள். ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க தண்ணீரை பீச்சியடித்த வாகனம் ஒன்றைக் கூட கைப்பற்றினார்கள். சில இடங்களில் போராடும் மக்களுடன் மோத முடியாது போலிஸ் பின்வாங்கியது. இருப்பினும் போலிஸ் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். முப்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
துனிசியாவில் நடந்த புரட்சி, எகிப்திய மக்களையும் எழுச்சி கொள்ள வைத்தது. “துனிசிய மாதிரி”, எகிப்திலும் பின்பற்றப்பட்டது. பேஸ்புக் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டது. சுமார் 90000 பேர் கலந்து கொள்வதாக தெரிவித்தனர். தற்போது எகிப்தில், டிவிட்டர் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. துனிசியாவில் முகம்மது வுவாசி என்ற வேலையற்ற இளைஞனின் தீக்குளிப்பு மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. அதே போன்று ஒரு மாதத்திற்கு முன்னர் போலிஸ் வன்முறைக்கு பலியான காலித் சைத் என்ற இளைஞனின் மரணம் எகிப்தியர்களை எழுச்சியுற வைத்தது.காலித் சைத் போலிசின் அத்துமீறல் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால், பொலிசாரால் கொல்லப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். காலித் சைத் போதைப்பொருள் உட்கொண்டதால் மரணமுற்றதாக போலிஸ் சோடித்த கதையை யாரும் நம்பவில்லை. மனித உரிமை நிறுவனங்களின் வற்புறுத்தலால், அரசே சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்து வழக்கு தொடுத்தது. மக்களை போராட்டத்திற்கு தள்ளிய காரணிகளில் போலிஸ் அராஜகமும் ஒன்று.
எகிப்தின் என்பது மில்லியன் சனத்தொகையில் அரைவாசிப் பேர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது நாளாந்த வருமானம் இரண்டு டாலர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. வேலையில்லாப் பிரச்சினை, தரமற்ற கல்வி, ஏழைகளை எட்டாத மருத்துவம் போன்ற குறைபாடுகளால் தமது அடிப்படை தேவைகள் பறிக்கப்பட்டதை எகிப்தியர்கள் உணர்கின்றனர். சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலையேற்றம் எகிப்தையும் பாதித்துள்ளது.
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடுகின்றனர். துனிசியாவில் நடந்ததைப் போல, பெரும்பான்மை மக்களின் தார்மீகக் கோபம் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. துனிசிய சர்வாதிகாரியை வீழ்த்திய மக்கள் புரட்சியின் பின்னர், உலகெங்கும் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். “எமக்கு உணவும், சுதந்திரமும், ஜனநாயகமும் வேண்டும். தேசத்திற்காக உயிரையும் கொடுப்போம்.” போன்ற கோஷங்களை எழுப்பும் மக்கள், சர்வாதிகாரம் வீழும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக சூளுரைக்கின்றனர். முப்பதாண்டு காலம் தேசத்தை பாழாக்கிய சர்வாதிகாரியின் முன்னாள் ஒரேயொரு தெரிவு மட்டுமே உள்ளது. “முபாரக், உனக்காக விமானம் காத்துக் கொண்டிருக்கிறது!”
எகிப்திய மக்கள் எழுச்சியை பேஸ்புக்கில் பின்தொடர்வதற்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.
We are all Khaled Said

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக