புதன், 6 அக்டோபர், 2010

இக்கட்டுரை சம்மந்தமான எனது பார்வை

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத்தான் இந்தத் தொடரில் நாம் தேடுவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றோம்.
கடந்த மாதம் நான் இஸ்ரேலுக்கு சென்றிருந்த சமயம் இந்தக் கேள்விகளுக்கான விடையை ஓரளவு என்னால் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
பல நாடுகளில் பல நுறு வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலிய மக்களின் கனவு, தரிசனம் எல்லாமே தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்வது என்கின்றதாகவே இருந்ததென்று நாம் கடந்த வாரம் பார்த்திருந்தோம்.
நாம் விடுதலை பெறவேண்டும்‘, ‘நமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்‘, ‘நமது தேசத்திற்குத் நாம் திரும்பிப்போகவேண்டும்என்ற இஸ்ரேலிய மக்களின் அந்தத் தரிசனத்தை அவர்கள் கனவுகளாக மாத்திரம் கண்டுகொண்டிருக்கவில்லை.
அதற்காக அவர்கள் பாடுபட்டார்கள்.
வியூகங்களை வகுத்தார்கள்.
செயற்பட்டார்கள்.
தங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு செயற்பட்டார்கள்.
தமது தலைமுறையில் தமது விடுதலை கைகூடவில்லையா? - தமது அடுத்த தலைமுறைக்கு அந்த விடுதலையின் எண்ணங்களை விதைத்துவிட்டுச் சென்றார்கள். தமது விடுதலைப் பயணத்தை தமது அடுத்த சந்ததி தொடரும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.
இந்த நடைமுறையையும், காத்திருப்பையும் சில வருடங்கள் மாத்திரம் அல்ல, - சுமார் 1900 இற்கும் அதிகமான வருடங்கள் அவர்கள் தொடர்ந்தார்கள் என்பதை ஈழத் தமிழர்களாகிய நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
தமது விடுதலைக்காக இஸ்ரேலியர்களது காத்திருப்பின் காலம் 1900 வருடங்கள். இத்தனை வருடங்கள் அவர்கள் தங்கள் கனவுகளைச் சுமந்தார்கள் என்பதுதான் இங்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டியதொரு முக்கிய பாடம்.
அடுத்ததாக, இத்தனை நூற்றாண்டுகள் தமது கனவை இஸ்ரேலியர்கள் எவ்வாறு தமது அடுத்த சந்ததிக்கு கைமாற்றிக் கொடுத்துவந்தார்கள் என்கின்ற நுணுக்கமும் நாங்கள் நிச்சயம் அறிந்துவைத்திருக்கவேண்டிய ஒரு விடயம்.( அது பற்றி மற்றொரு அத்தியாயத்தில் ஆராய்வோம்)
புலம்பெயர் இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஒரு காரியத்தைப் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.
தமது சொந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்த இஸ்ரேலிய மக்கள், கஷ்டப்பட்டுத் தங்களை வளர்த்துக்கொண்டார்கள். அவ்வாறு தங்களை வளர்த்துக்கொண்ட இஸ்ரேலிய மக்கள் தங்களது திறமைகள், செல்வங்கள், பெறுபேறுகள் அனைத்தையும் தமது விடுதலைக்காகவே பயன்படுத்தினார்கள்.
தாங்கள் நன்றாக வாழ்ந்தார்கள், தங்களை நல்ல நிலைக்கு வளர்த்துக்கொண்டார்கள். தாங்கள் வாழ்ந்த நாடுகளுக்கும் உதவிசெய்தார்கள், அப்படி உதவிகள் செய்ததன் ஊடாக கிடைத்த பலாபலன்களை தங்களுடைய இனத்தின் விடுதலைக்காகப் பயன்படுத்தினார்கள்.
இதற்கு ஒரு நல்ல உதாரணத்தை இந்த இடத்தில் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.
1914ம் ஆண்டு முதலாவது உலகமகா யுத்தம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்த உலக யுத்தத்தில் 33 நாடுகள் கலந்துகொண்டாலும் பிரதான யுத்தம் முக்கியமாக பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலேயே நடைபெற்றது.
சுமார் 4 வருடங்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தின் பொழுது பிரித்தானியா ஒரு பெரிய சங்கடத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானியா சந்தித்த அந்த சங்கடமும், அந்தச் சங்கடத்தை சமாளிக்க ஒரு யூதன் செய்த உதவியும்தான், யூதர்கள் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளக் காரணமாக இருந்தது.
முதலாம் உலக யுத்தத்தின் ஆரம்பத்தில் மிகவும் வெற்றிகரமாக முன்னேறிய ஜேர்மணியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்தார்கள். குறிப்பாக ஐரோப்பாவின் கரையோரப் பிரதேசங்களை ஜேர்மனிப்படைகள் ஆக்கிரமிப்பதில் வெற்றி கண்டன.
இது பிரித்தானியாவிற்கு பெருத்த ஆயுதத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது.
எப்படியென்றால், அந்தக் காலத்தில் பீரங்கிகளை இயக்குவதற்குத் தேவையான அசிடோன் என்ற வெடிமருந்துக்கான மூலப்பொருட்களை ஐரோப்பாவில் காணப்படும் ஒருவகை மரங்களில் இருந்துதான் பிரித்தானியா பெற்றுவந்தது. ஜேர்மனியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்ததால், அசிடோன் வெடிமருந்தை தயாரிக்கமுடியாமல் பிரித்தானியா திண்டாடியது.
ஒரு சந்தர்பத்தில் பிரித்தானியா தனது பீரங்கிகளை இயக்குவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது. பீரங்கித்தாக்குதல்களைத்; தவிர்த்து யுத்தம் புரியும் நிலைக்கு பிரித்தானியப்படைகள் தள்ளப்பட்டன.
முதலாம் உலகயுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அதிசம் நிகழ்ந்தது.
அந்த அதிசயத்தைச் செய்தவர் ஒரு யூதர். முதலாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய வெற்றிபெறுவதற்குக் காரணமாக, அந்த யூதரின் ஒரு செயலே காரணமாக இருந்தது. 
யார் அந்த யூதர்?
அப்படி அவர் என்ன செய்தார்?
முதலாம் உலகமகா யுத்தத்தில் பிரித்தானியா வெற்றிபெறக் காரணமாக இருந்த யூதரின் பெயர் கலாநிதி கெய்ம் வைஸ்மன் (Dr. Chaime Wizmann).
1874ம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்த இவர் ஜேர்மனி மற்றும் சுவிட்சலாந்தில் பல்கலைக்கழக படிப்பை முடித்துக்கொண்டு, இங்கிலாந்தில் உள்ள மன்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் இரசாயனவியல் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவருக்கு பிரித்தானியாவின் உயரதிகாரிகளோடு நல்ல தொடர்பிருந்தது. இவரை அணுகிய பிரித்தானிய உயரதிகாரிகள் அசிடோன் வெடி மருந்தை தயாரிக்க முடியுமா என்று வைஸ்மனைக் கேட்டார்கள்.
முடியும் என்று பதிலளித்த வைஸ்மன் தனக்கு ஒரு இரசாயன ஆய்வு கூடமும், தொழில்நுட்ப வசதிகளும், மூட்டை மூட்டையான சோளம் விதைகளும் தரும்படி நிபந்தனை விதித்தார். 
சோளம் விதைகளை மூலப்பொருளாகக்கொண்டு அசிடோன் என்ற வெடிமருந்தைத் தயாரித்து பிரித்தானியாவுக்குக் கொடுத்தார் வைஸ்மைன்.
அவர் தயாரித்துக் கொடுத்த வெடிமருந்துகளை பாவித்து பிரித்தானியப் படைகள் முதலாம் உலகயுத்தத்தை வெற்றிகொண்டன.
முதலாவது உலக யுத்தம் முடிவடைந்த உடனேயே பிரிட்டிஷ் அரசாங்கம் கலாநிதி வைஸ்மேன் அவர்களை அழைத்து தமக்கு அவர் செய்த பேருதவிக்கு பிரதியுபகாரம் செய்ய முன்வந்தது. ஆனால் வைஸ்மேன் தனக்கு வெகுமதிகள் அவசியமில்லை என்றும், உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டு, சீரழிந்து, நீண்டகாலமாக நிரந்தரத் தாயகம் இன்றித் தவிக்கும் யூதர்களுக்கு, யூதர்களின் பூர்வீகத் தாயகமான பலஸ்தீன நாட்டை (தற்போதைய இஸ்ரேல் தேசம்) பிரிட்டிஷ் அரசாங்கம் யூதர்களின் நிரந்தரக் குடியிருப்பாக வழங்கவேண்டும் என்பதே நான் விரும்பும் வெகுமதி என்று தெரிவித்தார்.
 (1517ம் ஆண்டுமுதல் 1917ம் ஆண்டுவரை சுமார் 400 வருடங்கள் துருக்கியின் ஒட்டோமான் பேரரசின் வசமிருந்த ஜெருசலேம் பகுதி, முதலாம் உலக யுத்தத்தின் பொழுது ஜெனரல் எட்முன்ட் அலன்பி (General Edmund Allenby) என்ற தளபதியின் தலைமையிலான பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.)
கலாநிதி வைஸ்மன் அவர்களின் விருப்பத்தைக் கவனத்தில் எடுத்த பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பல்பர் (Arthur James Balfour)> வைஸ்மனை நோக்கி உங்கள் ஜெருசலேம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். பிரித்தானியாவுக்கு பாரிய நன்மையைச் செய்த உங்களுக்காக பிரித்தானியா அதனை நிச்சயம் செய்யும்என்று கூறினார்.
யூதர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்த பிரித்தானியா, 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி, பலஸ்தீனாவில் யூத மக்களுக்கான தாயகம் அமைக்கப்படும் என்ற உறுதிப்பாட்டுடன் கூடிய பல்பர் பிரகடனத்தை (Balfour Declaration) வெளியிட்டது.
இஸ்ரேலிய மக்களின் அகதிவாழ்கையை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, தாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களில் நல்ல நிலையில் இருந்த அனைத்து யூதர்களுமே தமது இனத்தின் நலனுக்காக ஏதோ ஒருவகையில் பங்களிப்புச் செய்திருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது. சில ஈழத் தமிழர்களைப் போல் அந்த இனக் குழுமத்தில் இருந்து அன்னியப்பட்டு வாழ்ந்த யூத முக்கியஸ்தர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.
இன்று எத்தனையோ ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அதி உயர் ஸ்தானங்களில் இருக்கின்றார்கள். அரசியலில் தீர்மானம் எடுக்கும் இடங்களில் கூட அமர்ந்திருக்கின்றார்கள். ஆனால் தமது திறமையின் பலன்கள் அவர்கள் சார்ந்த மக்களின் விடுதலைக்கு வித்தாகவேண்டும் என்று அவர்கள் சிந்திப்பதும் இல்லை, செயற்படுவதும் இல்லை.
ஒரு விடுதலையைப் பெற்ற இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.
சரி. இப்பொழுது ஒரு முக்கிய விடயத்திற்கு வருவோம்.
இஸ்ரேலியர்கள் என்றால் யார்?
அந்த இனக் குழுமத்திற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
ஏன் அவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்?
அவர்களது வரலாறு என்ன?
இஸ்ரேலியர்கள் ஏன் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்?
இரத்தத்தால் எழுதப்பட்டுள்ள இந்த சரித்திரத்தை நாம் அடுத்த வாரம் முதல் விரிவாக ஆராய்வோம்.
தொடரும்…. 

நிராஜ் டேவிட்
 nirajdavid@bluewin.ch
யுதர்கள் விடுதலையினை மனதார விரும்பினர் .நாங்கள் அப்படியா?
தமிழ் அறிஞர்கள் உலகில் பெரிய பதவிகளில் உள்ளனர் என ஆதங்கப்படுகிறார் .நாங்கள் அவர்களை எப்படி பயன்படுத்தினோம் ?எண்ணிப்பாருங்கள் .
எனக்கு நல்ல நினைவு இருக்கிறது அண்டன்  பாலசிங்கம் அவர்களை CIA என கதைதவர்கள் உண்டு .
ஜெகத் கஸ்பர் அவர்களை RAW என்றவர்கள் உண்டு 
இப்போ உள்ள நிலைமை எல்லோரும் நன்கறிவர் .உருத்திரகுமாரன் துரோகி பட்டம் கொடுத்தாயிற்று....... .எப்படி முன் வருவர் ? 
நாங்கள் எவ்வளவு கல்விமான்களை உள்வாங்கியுள்ளோம் ?அவர்களுக்கு நாம் கெளரவம் அளித்துள்லோமா   ? இல்லையே ..........................
இன்றைய அதிர்வு தளத்தில் பார்த்தேன் .வெளிநாடுகளில் இருப்பவர்களது பிள்ளைகளின் நடவடிக்கை சம்மந்தமாக எழுதியுள்ளனர்  .இப்படித்தான் எங்களது சமுகம் உருவாகிக்கொண்டிருக்கிறது .எமக்கு அடுத்த தலைமுறையே மாறிவிடும் இக்கட்டு நிலையில்  யுதர்கள் உடன் எம்மை ஒப்பிடுவது எந்தவிதத்தில் சரி ?...............................................
இன்னொன்றையும் கவனத்தில் எடுத்து பாருங்கள் எங்களது தமிழ் சமுகத்தில் பழைய அறிவாளிகள் அனைவரும் (அதிகமானவர்கள்)ராமநாதன் ,அருணாச்சலம் ,ஏன் கதிர்காமர்  நீலன் திருச்செல்வம் போன்றோர் கூட சிறு புகழ்ச்சிக்காகவும் தீர்க்கதரிசனம் இல்லாமலும் நடந்தும் இருக்கிறார்கள் .அப்போ நாங்கள் எப்படி யுதராக முடியும்? 
  நாங்கள் பெருமை பெசிக்கொண்டிருப்போமே தவிர ,(அப்பவே புட்பக விமானம் என்றும் .எப்பவோ அணுவை பிளந்தோம் எண்டும் )கதைப்போமே தவிர எதுவுமே செய்யமாட்டோம் .செய்யவிடவும் மாட்டோம் .இது விளங்காமல் இந்த கட்டுரையாளர் இஸ்ரேல் போயுள்ளார் பணம் செலவழித்து .விசரா உங்களுக்கு ?நிராஜ் டேவிட்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக