புதன், 23 பிப்ரவரி, 2011

nanri maruaaivu


ஈழப்பிரச்சினையும் தமிழகத் தேர்தலும்

மஹாபலி
இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகம் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. இப்போதுள்ள சூழலைக் கொண்டு பார்க்கும்போது, இதே கூட்டணிகள் தொடரும் என்றால் இரண்டு பெரிய அணிகள் மோதப்போகின்றன என்று சொல்லலாம். தி.மு.க, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கூட்டணி ஒரு அணியாகவும் அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் இன்னொரு அணியாகவும் உள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க எந்த கூட்டணியில் சேரும் என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்தின் தற்போதைய செயல்பாடுகளை வைத்து பார்க்கும்போது அவர் நிச்சயமாகத் தி.மு.க கூட்டணியில் இணைய மாட்டார் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
திமுக அய்ந்து ஆண்டுகளில் அள்ளித் தெளித்துள்ள இலவசத் திட்டங்களே அதன் ஒரே நம்பிக்கை. இந்த இலவசத் திட்டங்களைத் தாண்டி திருநங்கைகளுக்கான நலவாரியம், தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அருந்ததியர்க்கான உள் ஒதுக்கீடு போன்றவை தி.மு.க அரசின் குறிப்பிடத்தக்க நல்ல திட்டங்கள். ஆனால், இவை பாமர மக்களைக் கவரக்கூடிய, ஜனரஞ்சகமான, வாக்கு வங்கியை உருவாக்கக்கூடிய திட்டங்கள் இல்லை. இன்னொருபுறம் வெளிப்படையான வாரிசு அரசியல் போட்டிகள், திரைப்படத்துறையையே கலைஞர் குடும்பம் ஆக்கிரமித்துள்ளது, அருவெறுக்கத்தக்க வகையில் நடைபெறும் கருணாநிதிக்கான பாராட்டு விழாக்கள், விலைவாசி உயர்வு ஆகியவை திமுகவின் பாதகங்கள்.
வருடம் முழுதும் நடக்கும் உழவை அறுவடைக்காலத்தில் பெருமழை வந்து கெடுத்ததைப் போல, இலவசத் திட்டங்களாலும் ஸ்டாலினை முன்வைத்து மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் திமுக உருவாக்கி வைத்திருந்த இமேஜையும் ஒட்டுமொத்தமாகக் காலி செய்து விட்டது ஸ்பெக்ட்ரம் பிரச்சினை. இன்னொருபுறம் விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவுக்கும் கூடும் கூட்டத்தை வைத்து மட்டுமே எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் அலை அலையாய்த் திரள்வதும் அது வாக்குகளாய்த் திரளாமல் போய்விடுவதும் தமிழக அரசியலுக்குப் புதிதல்ல.
மேலும் கருணாநிதியின் மீது வைக்கப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் இம்மி பிசகாமல் பொருந்திப் போகிறவர்தான் ஜெயலலிதா. இன்னொரு பக்கம் விஜயகாந்த், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் கருணாநிதி, ஜெயலலிதாவை விட ஒரு மோசமான ஆட்சியாளராக இருப்பார் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றும் முன்பே குடும்ப அரசியல் செய்வது, இட ஒதுக்கீடு தொடங்கி தமிழகத்தின் முக்கியமான எந்த பிரச்சினையிலும் எந்த கொள்கையும் இல்லாதது, ஒருகாலத்தில் ஈழ ஆதரவு பேசி தன் மகனுக்குப் பிரபாகரன் என்று பெயர் வைத்த விஜயகாந்த், இறுதிப்போர்க் கால கட்டத்தின் போது கருணாநிதி, ஜெயலலிதாவைப் போலவே சந்தர்ப்பவாதியாக நடந்துகொண்டது என்று அவரது செயல்பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தியும் ஜெயலலிதாவின் ஊழல்கள் பற்றிய மறதியும் தமிழக மக்களிடம் அதிகரித்தால், ஜெயலலிதா முதல்வர் ஆவார். ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பற்றியெல்லாம் கவலையில்லை, இலவச வீடும் இலவச டிவியும்தான் முக்கியம் என்று தமிழக மக்கள் நினைத்தால் கருணாநிதி முதல்வர். ஆனால், இதைத் தாண்டி ஈழப்பிரச்சினைக்கும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் உள்ள உறவு குறித்து யோசிப்போம்.
ஒருபுறம் ஈழ ஆதரவாளரான திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியே ஈழ எதிர்ப்பு கூட்டணியாகக் கருதப்படுகிறது. இன்னொருபுறம் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்படும் வைகோவும் சீமானும் அதிமுக கூட்டணி ஆதரவு நிலையில் இருக்கிறார்கள். இப்போது இரண்டு கேள்விகளை ஆராய்வோம்.
1. ஈழப்பிரச்சினை சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா?
2. தேர்தல் களத்தில் ஈழப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா?
முதலாவது கேள்விக்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சி. இறுதிப் போர்க் காலகட்டத்தில் பெரியார் தி.க, சீமான் போன்றவர்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தபோதும் காங்கிரஸ் கூட்டணியே கணிசமாக வெற்றிபெற்றது. இதற்குக் காரணம் தமிழக மக்கள் ஈழப்பிரச்சினை பற்றி அக்கறை காட்டவில்லை என்றோ பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டது மட்டும்தான் காரணம் என்றோ சொல்லிவிட முடியாது.
ஈழப்பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டுபோய் வெகுஜன அரசியலாக மாற்றத் தவறியதும் ஈழப்பிரச்சினையை முன்வைக்கும் தேர்தல் கட்சித் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருப்பதும் முக்கியமான காரணங்கள். குறிப்பாக ஜெயலலிதா ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று பேசியபோதும் சரி, மற்ற நேரங்களில் ஈழ எதிர்ப்பைப் பேசியபோதும் சரி வைகோ எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டே ஒருவர் ஈழ ஆதரவு பேசினால் அவரைத் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
வைகோ செய்த அதே தவறை இப்போது அவரோடு சேர்ந்துகொண்டே சீமானும் எடுத்திருக்கிறார். சீமானின் இந்த முடிவு அவர் மீது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வைத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. வெறுமனே விடுதலைப்புலிகள் பலமோடு இருந்த காலங்களில் மட்டுமல்ல, இறுதிப்போருக்குப் பிறகும் கூட அ.தி.மு.க ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காகத் தமிழகத்தில் அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒட்டி சட்டமன்றத்தில் பா.ம.க, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்களோ ஜெயலலிதாவின் ஆணைப்படி சட்டமன்றத்துக்கே செல்லாமல், புறக்கணித்தனர்.
நளினி விடுதலை குறித்த பிரச்சினையிலும் அதிமுகவின் நிலைப்பாடு என்பது ஈழ எதிர்ப்பு நிலைப்பாடுதான். இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கும் சுப்பிரமணியசாமி, துக்ளக் சோ போன்ற எல்லோருமே ஈழ எதிரிகள். வைகோவையும் சீமானையும் இன்னமும் ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை. தேர்தல் வெற்றிக்காக, அவர்கள் ஈழ ஆதரவு பேசும்போது தற்சமயம் மௌனம் காத்தாலும், ஆட்சிக்கு வந்துவிட்டால் ஜெயலலிதா சோ, சுப்பிரமணியசாமியின் பக்கம்தான் நிற்பார். எல்லாவற்றையும் விட முக்கியம் அவர் கடைசிநேரம் வரை காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி செய்தவர், நாளை கூட முயற்சி செய்பவர் என்று சொல்லலாம். ‘ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் திமுக ஆதரவை விலக்கிக்கொண்டால் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்’ என்று ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தது ஈழமக்களின் எதிரியான காங்கிரஸ் கட்சிக்குத்தானே.
சில வாரங்களுக்கு முன்பு, ‘காங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, இப்படி எல்லாம் கேள்வி எழுப்பக்கூடாது’ என்று வைகோ பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்டாரே தவிர, ‘காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம்’ என்று சொல்லவில்லை.
சீமான், தமிழக மக்களால் முழுவதுமாக அறியப்பட்ட அரசியல் தலைவர் அல்ல. ஆனால், அவரது தொடக்கங்களே இப்படியான குழப்பநிலையாக இருந்தால் அவர் பெரிதாக எதையும் சாதிக்க மாட்டார். மேலும் இதுமட்டுமல்லாது விடுதலை ஆனபிறகு சீமானின் பேச்சுகளும் எழுத்துகளும் நகைப்புக்கு உரியவையாக மாறிவிட்டன.ஒருபுறம் சினிமா பாணியில் ‘என்னை ஒருநாள் முதல்வர் ஆக்குங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறேன்’ என்கிறார், இத்தகைய பேச்சுகள் அவரை மதிப்புக்குரிய தலைவராக உருவாக்காது.
இரண்டாவது கேள்விக்கு வருவோம், வெறுமனே தமிழகத் தேர்தல் நிலைப்பாடுகளையும் தேர்தல் கட்சிகளையும் அடிப்படையாக வைத்து ஈழ அரசியல் பேசியதன், பேசி வருவதன் தவறுதான் சீமானின் அதிமுக ஆதரவுநிலை. இங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே (இந்திராவின் காங்கிரஸ் உள்பட) ஈழப்பிரச்சினையைத் தங்கள் தேர்தல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டனவே தவிர அவர்களுக்கு உண்மையில் ஈழமக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது.
வைகோ, நெடுமாறன், திருமாவளவன், ராமதாஸ், இப்போது சீமான் என்று இந்த தலைவர்களின் தேர்தல் சந்தர்ப்பவாத அரசியலையும் வெறுமனே உணர்ச்சியூட்டும் பேச்சுகளைத் தாண்டி முக்கியமாக முன்வைக்கப்பட வேண்டியவை இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், தமிழக மீனவர் படுகொலைகள், அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல் ஆகியவை.
இவற்றை மாற்று அரசியல் களத்தில்தான் செய்ய முடியுமே தவிர, தேர்தல் ஆதரவு, எதிர்ப்பு களத்தில் அல்ல. அத்தகைய களத்தில் பணியாற்றி தமிழக மக்களிடம் கொண்டு செல்லும்போது மட்டும்தான், தமிழகத்தில் ஈழ மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசுவது பொருளுடையதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக