செவ்வாய், 12 ஏப்ரல், 2011

புலிகள் சரணடைவது குறித்து 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்!- ஐ.நா. அதிகாரி


[ செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011, 01:39.00 AM GMT ]
வன்னியில் நடைபெற்ற இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு பா நடேசன் உட்பட முக்கியவர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணிநேரங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு தெரியும் என ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழ்நெற் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு பா நடேசன், புலித்தேவன் உட்பட முக்கியஸ்தர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணிநேரங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு தெரியும். ஆனால் சரணடைந்தவர்களை சிறீலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்.
சரணடைபவர்களின் விபரங்களும் ஐ.நாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அவர்களை வரவேற்பதற்கு கொழும்பில் பணியாற்றிய ஐ.நா அதிகாரிகள் வவுனியாவுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தனர்.
அப்போது (2009 காலப்பகுதி) கொழும்பில் பணியாற்றிய ஐ.நா அதிகாரிகளில் பலர் தற்போது பணியில் இருந்து விலகியுள்ளனர் அல்லது சிறீலங்காவை விட்டு வெளியேறியுள்ளனர்.
சரணடைவது தொடர்பான மாயைகளை உருவாக்கி விடுதலைப்புலிகளை படுகொலை செய்யவே கொழும்பும், கொழும்புக்கு ஆதரவான ஐ.நா அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த சமயம், ஐ.நா செயலாளர் நாயகம் பான கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் கொழும்பில் தங்கியிருந்தார்.
இரு ஐ.நா அதிகாரிகளே ஒமந்தையில் உள்ள சிறீலங்கா சோதனை நிலையத்திற்கு இரகசியமாக அனுப்பப்பட்டபோதும், ஏனையவர்கள் தாண்டிக்குளத்தை தாண்டுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பில் அனைத்துலக விசாரணைகளின்போது சாட்சியமளிக்க தான் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக